

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் குடியரசு தின வரவேற்பு அழைப்பிதழில் மாநில அரசின் இலச்சினை இடம்பெற்றதுடன் தமிழ்நாடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு என்ற வார்த்தையை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பயன்படுத்தாமல் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என அச்சடிக்கப்பட்டதுடன், தமிழ்நாடு அரசின் இலச்சினையில் ‘தமிழ்நாடு’ என்று எழுதப்பட்டிருப்பதால் மாநில அரசின் இலச்சினையும் அழைப்பிதழில் தவிர்க்கப்பட்டு மத்திய அரசின் இலட்சினை மட்டுமே இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து திமுக தரப்பில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து புகார் அளிக்கப்பட்டது. அந்த கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு குடியரசுத் தலைவர் அனுப்பினார்.
இதற்கிடையே, காசி தமிழ்ச் சங்கமம் விழாவில் வரலாற்றுப் பண்பாடு பற்றி பேசும் போது, காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்கவே தமிழகம் என்ற வாா்த்தையைப் பயன்படுத்தியதாக ஆளுநர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், குடியரசு தினத்தன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் வரவேற்பு விழாவுக்கான அழைப்பிதழ் தற்போது வெளியாகியுள்ளது. அதில், பழையபடி தமிழக அரசின் இலச்சினை இடம்பெற்றதுடன், தமிழ்நாடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநர் சுமூக போக்கிற்கு வந்துள்ள நிலையில், ஆளுநரின் விருந்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.