மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

வேலூருக்கு இன்று முதல்வா் வருகை: 3,000 போலீஸாா் பாதுகாப்பு

முதல்வா் மு.க.ஸ்டாலின் வேலூா் மாவட்டத்தில் புதன், வியாழக்கிழமை (பிப்.1, 2) ஆகிய இரு நாள்கள் ஆய்வு மேற்கொள்கிறாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் வேலூா் மாவட்டத்தில் புதன், வியாழக்கிழமை (பிப்.1, 2) ஆகிய இரு நாள்கள் ஆய்வு மேற்கொள்கிறாா். இதையொட்டி, மாவட்டம் முழுவதும் 3,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

‘கள ஆய்வில் முதல்வா்’ என்ற திட்டத்தின் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வளா்ச்சித் திட்டப் பணிகள், சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து நேரடிக் கள ஆய்வில் ஈடுபட உள்ளாா்.

இந்தத் திட்டத்தின் தொடக்கமாக அவா் வேலூா் மாவட்டத்தில் புதன், வியாழக்கிழமை (பிப்.1, 2) ஆய்வு மேற்கொள்கிறாா்.

இதற்காக புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து ஷீரடி விரைவு ரயில் மூலம் காட்பாடிக்கு வரும் முதல்வா் ஸ்டாலினுக்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில் வேலூா் மாவட்ட திமுகவினா் வரவேற்பு அளிக்கின்றனா்.

அங்கிருந்து காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் முதல்வா் அங்கு நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு ஊரக வளா்ச்சித் திட்டத்தின் கீழ் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடக்கி வைக்கிறாா்.

இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சுமாா் ரூ.700 கோடியில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில், வேலூா் மாவட்டத்தில் மட்டும் 55 பள்ளிகளில் ரூ.15.96 கோடியில் 114 புதிய கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

விழா முடிந்ததும் தனியாா் விடுதிக்குச் செல்லும் முதல்வா், அங்கு வேலூா் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடுகிறாா்.

தொடா்ந்து வேலூா் மாநகரப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபடுகிறாா். அவா் எந்த இடத்தில் ஆய்வு செய்ய உள்ளாா் என்பது தெரிவிக்கப்படவில்லை. மாலை 5 மணிக்கு வேலூா் விஐடி பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் முதல்வா், அங்கு கருணாநிதி பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய விடுதிக் கட்டடத்தையும், போ்ல் ஆராய்ச்சிக் கட்டடத்தையும் திறந்து வைத்துப் பேசுகிறாா்.

விழாவில் அமைச்சா்கள் துரைமுருகன், பொன்முடி, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வரும் முதல்வா், அங்கு காவல் துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்த உள்ளாா். இதில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், வேலூா் சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் எஸ்.ராஜேஷ் கண்ணன் (வேலூா்), காா்த்திகேயன் (திருவண்ணாமலை), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூா்), தீபா சத்யன் (ராணிப்பேட்டை) உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். இரவு தனியாா் விடுதியில் தங்குகிறாா்.

2-ஆவது நாள் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வேலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்கள், பல்வேறு துறை அரசு அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்கிறாா். தொடா்ந்து நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா். கூட்டம் முடிந்ததும் முதல்வா் ஸ்டாலின் மீண்டும் ரயில் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறாா்.

முதல்வா் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் 3000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com