சென்னையின் தேவை சாலை மட்டுமல்ல போக்குவரத்து சமிக்ஞைகளும்

சிக்னல்களில் ஆரம்ப காலங்களில் இருந்த நேரம் காட்டும் சமிக்ஜை, பின்னாளில் எங்கோ ஓரிடங்களில் மட்டுமே ஒளிர்கின்றன.
சாலை சமிக்ஞைகள்
சாலை சமிக்ஞைகள்


சென்னையில் கிட்டத்தட்ட 50 லட்சம் வாகனங்கள் இயங்கி வருகின்றன. காலை நேரங்களில் அனைவருமே ஒன்றாக வீட்டை விட்டு வெளியேறிவிடுவார்களா என்று எண்ணத்தோன்றும் அளவுக்கு வாகன நெரிசல் விழிப்பிதுங்க வைக்கின்றன.

பல முக்கிய சந்திப்புகளில் சாலைகளுக்கான சிக்னல்கள் மட்டுமே இப்போதைக்கு செயல்படுகின்றன. சிக்னல்களில் ஆரம்ப காலங்களில் இருந்த நேரம் காட்டும் சமிக்ஜை, பின்னாளில் எங்கோ ஓரிடங்களில் மட்டுமே ஒளிர்கின்றன.

தமிழகத்தில் குறிப்பாக முக்கிய சாலைகளின் சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்களில் கட்டாயம் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியது என்ற நேரத்தைக் காட்டும் சமிக்ஞை அமைக்கப்பட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கை.

அதோடு, வரப்போகும் மழைக்காலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தரமான சாலைகள் போடப்பட வேண்டும். மழைக்காலங்களில் சாலைகளில் விழும் சிறு சிறு கற்களை உடனடியாக அகற்றினால், மழையின்போது சாலைகளில் ஏற்படும் திடீர் பள்ளங்களைத் தவிர்க்கலாம். சாலைகள் போடுவதை விட, இதற்கு ஆகும் செலவு குறைவும் கூட.

சில சந்திப்புகளில் வாகனங்கள் நின்றிருக்கும். ஆனால், ஒளிர் விளக்குகள் எங்கிருக்கின்றன என்பது தெரியாது. சில சந்திப்புகளில் ஃப்ரீ லெப்ட் என்ற வசதி இருக்கிறதா இல்லையா என்பது தெரியாது. சில மேம்பாலங்களில் எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்பது தெரியாது. காரணம். பல இடங்களில் வாகன ஓட்டிகளை வழிநடத்தும் சமிக்ஞை பலகைகள் வைக்கப்பட்டிருக்காது.

குறிப்பாக, சாலை சந்திப்புகளை ஒட்டிய பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும். சாலைகளில் அதுவும் குறிப்பாக சந்திப்புகளில் தோண்டப்படும் பள்ளங்கள், சாலைகளில் கொட்டப்பட்டிருக்கும் சிறு கற்கள், வேகமாக வந்து பிரேக் போடும் வாகனங்களை நிலைகுலைய வைத்துவிடும்.

சாலைகளில் 37 வகையான எச்சரிக்கை சமிக்ஞைகளும், 27 வகையான தகவல் சமிக்ஞைகளும் உள்ளனவாம். சாலைகளில் மஞ்சள் மற்றும் வெள்ளை பெயின்டால் எழுதப்படும் ஏழு வகையான குறிகளும் உள்ளனவாம். ஆனால் இவை அனைத்தும் எங்கே இருக்கின்றன என்று கேட்டால்.. போக்குவரத்து சாலை விதிகளுக்கான புத்தகங்களை மட்டுமே கைகாட்ட முடியும் போல.

வேகத்தடை உள்ளது என்றோ, வலது பக்கம் திரும்பலாம் என்றோ, வளைவு வருகிறது என்றோ முன்கூட்டியே அறிவிக்கும் பலகைகளைப் பார்த்து பல நாள்கள் ஆகிவிட்டன. ஏராளமான வாகனங்கள் இயக்கப்படும் சாலைகளில் இந்த சமிக்ஞைகள் வைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

வாகனங்களில் அடிப்படையான சான்றிதழ்கள் இல்லாமல் வருபவர்களையும், தலைக்கவசம் அணியாமல் வருபவர்களையும் தண்டிப்பதும், அபராதம் விதிப்பது மட்டுமே போக்குவரத்துத் துறையின் கடமை அல்ல, தரமான சாலைகளை உறுதி செய்வதும், வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகளை அறிவுறுத்துவதும் கூட கடமைதான் என்பதை மறந்துவிடும் நிலை எழுந்துள்ளது.

எத்தனை சந்திப்புகளில், வாகனங்கள் நிற்கும் போடும், மக்கள் கடந்து செல்லும் வரிக்கோடுகளும் நன்றாக தெரியும்படி இருக்கின்றன. பல உலக நாடுகள் வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்த டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்ட நிலையில், நாம் இன்னமும் அடிப்படை விஷயங்களிலேயே அ, ஆ, கற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதே நிலை.

ஒரு சாலையில் வெள்ளைக் கோடு போட்டு ஆறு மாதங்களில் அது காணாமல் போய்விடும். நமது வெப்பநிலை அப்படி இருக்கிறது. ஆனால் அதற்காக அந்தச் சாலையில் அடுத்த 6 வருடத்துக்குப் பிறகுதான் கோடு போடுவோம் என்றில்லாமல், சுழற்சி முறையில் இப்பணியை போக்குவரத்துத் துறை மேற்கொள்ள வேண்டும்.

கடமையைச் செய்துவிட்டுத்தான் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இந்தப் போக்குவரத்து விதிகளை அறிந்துகொண்ட பொதுமக்கள், ஏன் தலைக்கவசம் அணிவதில்லை என்று போக்குவரத்து காவலர்கள் கேள்வி எழுப்பும்போது, ஏன் சாலையில் வரிக்கோடுகள் இல்லை, அபராதம் செலுத்துங்கள் என்று கேட்கும் நிலை கூட ஏற்பட்டுவிடலாம்..
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com