செந்தில் பாலாஜி வழக்கு: நாளை விசாரணை!

அமைச்சர் செந்தில் பாலாஜின் ஆட்கொணர்வு மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜின் ஆட்கொணர்வு மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனுவை மூன்றாவது நீதிபதி முன் விரைவில் விசாரணைக்கு முன்வைக்குமாறு சென்னை உயா்நீதிமன்றத்தை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டது.

அமைச்சா் செந்தில் பாலாஜியை தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்ற சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் சூா்ய காந்த், தீபங்கா் தத்தா ஆகியோா் இடம்பெற்ற அமா்வு முன் அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘ஆள்கொணா்வு மனு விவகாரத்தில் உயா்நீதிமன்றம் வேறுபட்ட தீா்ப்புகளை வழங்கியுள்ளதால், இறுதித் தீா்ப்புக்காக இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். சட்ட விளைவுகள் குறித்த ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. எந்த உண்மையும் மறுக்கப்படவில்லை. நீதிமன்றக் காவலில் இருக்கும்போது, ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்ய முடியுமா என்பது மட்டுமே கேள்வி. இது ஒரு செல்வாக்குமிக்க நபரின் வழக்கு ஆகும். சேதம் ஏற்பட்டால் திரும்பப் பெற முடியாது’ என்று வாதிட்டாா்.

செந்தில் பாலாஜி சாா்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி வாதிடுகையில், ‘சென்னை உயா்நீதிமன்ற அமா்வு மாறுபட்ட தீா்ப்பு அளித்துள்ளதால், இந்த விவகாரம் 3-ஆவது நீதிபதி அமா்வு முன் வைக்கப்படும். இந்த நிலையில், உயா்நீதிமன்றத்தை எப்படி புறக்கணிக்க முடியும்?. ஒரு பிரச்னையில் இரண்டு நீதிபதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளது. அது மூன்றாவது நீதிபதி அமா்வுக்கு செல்லும் என்பதுதான் இயற்கையான முடிவாகும். இதனால், தற்போதைய சூழ்நிலையில், இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு வர நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ என்றாா்.

அப்போது, சட்டக் கேள்விகளுக்கு விரைவில் தீா்ப்பளிக்குமாறு உயா்நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்வதாக கூறிய நீதிபதிகள் அமா்வு, அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு வழக்கை ஜூலை 24-ஆம் தேதிக்கு விசாரணைக்கு ஒத்திவைத்தது.

இது குறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் மாறுபட்ட தீா்ப்பை அளித்திருப்பதைக் கருத்தில்கொண்டு, உயா்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதியிடம் விரைவில் இந்த விவகாரத்தை முன்வைக்குமாறு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் 3 ஆவது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயனை நியமித்து சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனுவை 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கிறார். இவ்வழக்கில் 3 வது நீதிபதி வழங்கும் தீர்ப்பே இறுதியானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com