கல்வியும் சுகாதாரமும் இரு கண்கள்: மு.க. ஸ்டாலின்

'கல்வியும் சுகாதாரமும் திராவிட மாடலின் இரு கண்கள்' என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கல்வியும் சுகாதாரமும் இரு கண்கள்: மு.க. ஸ்டாலின்

'கல்வியும் சுகாதாரமும் திராவிட மாடலின் இரு கண்கள்' என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மதுரை ஆயுதப் படை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவில் அவர் மேலும் பேசியதாவது: 

திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என நான் அடிக்கடி கூறுவது கல்வியும் சுகாதாரமும்தான். இதனால்தான், கருணாநிதி நூற்றாண்டு தொடக்கமான கடந்த மாதம் 15-ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை சென்னை கிண்டியில் திறந்துவைத்தேன். தற்போது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்துள்ளேன். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வோம் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் சென்னையில் உயர்சிறப்பு மருத்துவமனையும், மதுரையில் இந்த நூலகமும். இந்த இரண்டும் தேர்தல் அறிக்கையில் திமுக அளிக்காத வாக்குறுதிகள்.

'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என அறச்சீற்றம் கொண்டு கண்ணகி எரித்த மதுரை மாநகரத்தில் லட்சக்கணக்கான நூல்கள் கொண்ட இந்த நூலகத்தால் அறிவுத் தீ பரவப் போகிறது.  திராவிட இயக்கம் அரசியல் இயக்கம் மட்டுமல்ல, அறிவு இயக்கமும்தான். தமிழ்ச் சமுதாயத்தின் எழுச்சிக்கும் மீட்சிக்கும் தேவையான கருத்துகளை எழுதி, பேசி, படித்து வளர்ந்தவர்கள்தான் திராவிட இயக்கத்தினர். 

படிப்பகங்களால் வளர்ந்து, ஆட்சிப் பொறுப்புக்கு வந்து பிரம்மாண்டமான நூலகங்களைக் கட்டி வருகிறோம். மதுரையில் 2,13,338 சதுர அடி பரப்பளவில் ரூ.120.75 கோடியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவுக்கு தொழிலதிபர் சிவ நாடாரையும் அவரது மகள் ரோஷினி நாடாரையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்தோம். சிவ நாடார் மிகப்பெரிய தொழில் அதிபர் மட்டுமல்ல, இந்தியாவிலேயே அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கி வருபவர். உனக்கு பணம் வரும் போது பிறருக்கு உதவி செய் என்று அவரது தாய் சொன்னதால், அறக்கட்டளை தொடங்கி உதவி வருகிறார்.
அவருடைய மகள் ரோஷினி, அந்த நிறுவனத்தின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். பெண்கள் அனைத்துப் பொறுப்புகளிலும் பணியாற்ற வேண்டும் என்ற பெரியாரின் கனவு நனவாகும் காட்சியின் அடையாளமாகவும், இவர்கள் இருவரும் இந்த விழாவில் பங்கேற்றனர். 

படிப்புதான் நிலையான சொத்து: மாணவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் நன்றாக படியுங்கள் என்றுதான் கூறி வருகிறேன். படிப்பும், வேலைவாய்ப்பும் நம்முடைய உரிமை என்று கிளர்ந்தெழுந்த இனம்தான் திராவிட இனம். எத்தனை தடைகள் வந்தாலும், படிப்பை மட்டும் யாரும் கைவிடக் கூடாது. படிப்பு மட்டும்தான் யாராலும் திருட முடியாத நிலையான சொத்து. அந்தப் படிப்பை நாம் எல்லோரும் அடைய வேண்டும் என்று கருணாநிதி உருவாக்கியதுதான் இன்றைய நவீன தமிழ்நாடு.

இன்றைக்கு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வளர்ச்சி கருணாநிதியால் உருவாக்கப்பட்டவை. ஓர் இனத்தின் வளர்ச்சிக்கு முதலில் தேவை கல்வி. அதை முதலில் கொடுத்தது, திராவிட இயக்கத்தின் தாய் கட்சியான நீதிக் கட்சி. தமிழகத்தில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தியது திமுக ஆட்சி. புகுமுக வகுப்பு வரை இலவசக் கல்வி என்று முதல்வர் கருணாநிதி அறிவித்த பிறகுதான் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் பள்ளிகளுக்கு வந்தனர். இதை அறிந்த பெருந்தலைவர் காமராஜரே பாராட்டியுள்ளார். மேலும், காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவரும் கருணாநிதிதான்.

காமராஜர் பிறந்த நாளில்தான் இந்த நூலகத்தைத் திறந்துள்ளோம். தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளை அதிகப்படுத்தியது, அனைத்துப் பள்ளிகளிலும் நூலகம், உடற்கல்வியை கட்டாயமாக்கியது, அறிவியல் கூடங்களை அமைத்தது, பாடப் புத்தகங்களை இலவசமாக வழங்கியது, சத்துணவில் வாரம் 5 நாள்கள் முட்டைகளை வழங்கியது, கிராமப்புற மாணவர்களுக்கும், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கும் சலுகைகள் வழங்கியது, அனைத்து மாணவர்களுக்கும் இலவசப் பேருந்து பயண அட்டை, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை, கணினிப் பாடத்தை அறிமுகம் செய்தது என சாதனைகளைச் செய்தவர் கருணாநிதி.

இதன் தொடர்ச்சியாகத்தான் திராவிட மாடல் அரசும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தரமான கல்வியை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்துக்கு முன்னேற வேண்டும் என்பதற்கான அனைத்துப் பணிகளையும் செய்து வருகிறோம். இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், 'எண்ணும் எழுத்தும்' இயக்கம், மாணவர்களின் பசியைப் போக்கும்,  காலை சிற்றுண்டித் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றார் அவர்.

விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்புரையாற்றினார். அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு , பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், ஹெச்.சி.எல். நிறுவனர் சிவ நாடார், அவரது மகள் ரோஷினி, மாவட்ட ஆட்சியர் மா.சௌ. சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

முன்னதாக, புதுநத்தம் சாலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து நூலகத்துக்குள் சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.


தமிழகத்தின் கலைநகர் மதுரை

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் தலைநகர் சென்னை என்றால், தமிழகத்தின் கலைநகர் மதுரை. தலைநகர் சென்னையில் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அவரது தம்பி கருணாநிதி அமைத்துத் தந்தார். இன்று கருணாநிதி நூற்றாண்டில், தமிழகத்தின் கலைநகரான மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்னும் தென் தமிழகத்தின் அறிவாலயம் திறக்கப்பட்டது. 

கருணாநிதியே ஒரு நூலகம்தான்: கருணாநிதியைப் பொருத்தவரையில் எந்தத் துறையில் நுழைந்தாலும் அந்தத் துறையில் அவர்தான் முதலிடம் வகிப்பார். மாணவராக இருந்தபோதே கையெழுத்துப் பிரதியாக பத்திரிகையை நடத்தினார். இலக்கியத் துறையில் கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், உரையாசிரியர் என அனைத்திலும் முத்திரை பதித்தார். மேலும், கருணாநிதியே மிகப்பெரிய நூலகம்தான். அவர் எழுதிய புத்தகங்களை மட்டுமே வைத்தால்கூட அதுவே பெரிய நூலகம் போல இருக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com