அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் ஏழை மக்கள் பாதிப்பு: பொன். ராதாகிருஷ்ணன் 

தஞ்சாவூர்: அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் ஏழை மக்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே துலுக்கம்பட்டியில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
தஞ்சாவூர் அருகே துலுக்கம்பட்டியில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர்: அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் ஏழை மக்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காமராஜர் பிறந்த நாளையொட்டி தஞ்சாவூர் அருகே துலுக்கம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தமிழ்நாட்டில் கல்வி அறிவு ஏழு சதவீதம் மட்டுமே இருந்த நிலையில், அதை 37 சதவீதமாக உயர்த்தி காட்டியவர் காமராஜர். மேலும் 3 கி.மீ.க்கு ஒரு தொடக்கப் பள்ளியும் 5 கி.மீ.க்கு ஒரு மேல்நிலைப் பள்ளியையும் கொண்டு வந்தவர் காமராஜர். ஆனால், இப்போது ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன.

அரசுப் பள்ளி மூடப்படுகிறது என்றால், காமராஜரின் இலவச கல்வி திட்டமும் மூடப்படுகிறது. ஏழை மக்களின் எதிர்காலம் மூடப்படுகிறது. பெற்றோர்களின் வருமானத்தில்தான் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியும் என்ற நிலைமைக்கு மீண்டும் திமுக தள்ளியுள்ளது. எல்லா விஷயங்களுக்கும் சாதக, பாதகங்கள் உண்டு. ஆனால் பொது சிவில் சட்டத்தைப் பொருத்தவரை சட்ட வரைவு வருவதற்கு முன்பே சரி இல்லை எனக் கூறுவது எந்த வகையில் நியாயம். சட்ட வரைவு வெளியிடப்பட்ட பிறகு கருத்துகளைச் சொல்லலாம்.

அது எந்த வகையில் மக்களுக்கு ஏற்புடையாகதாக இருக்குமோ, அந்த வகையில் அச்சட்டத்தைக் கொண்டு வருவது அரசின் கடமை. தமிழ்நாட்டில் 1967 ஆம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி இல்லாமல் போய்விட்டது. குறிப்பாக காமராஜருக்கு பிறகு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியே இல்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே தங்களுடைய தலைவர்களை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய அனைத்து திட்டங்களையும் திமுக வேண்டாம் எனக் கூறி வருகிறது.

நீட் தேர்வு வந்த பிறகு சாதாரண குடிசையில் வாழக்கூடிய ஏழை மாணவர்களும் மருத்துவக் கல்வியில் படிப்பதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர். மாணவர்களைச் செம்மைப்படுத்தி, ஊக்கப்படுத்தி திறன் மிக்கவர்களாக மாற்ற வேண்டியதுதான் அரசின் கடமை. தலைநகரை யார் ஆள வேண்டும் என்கிற கூட்டம் தில்லியில் நடைபெறவுள்ளது. மாநிலங்களில் உள்ள பிரச்னைகளை எப்படி சரி செய்வது என்பது குறித்த கூட்டம் பெங்களூருவில் நடைபெற இருக்கிறது.

மேக்கேத்தாட்டு அணை கட்டுவதைத் தடுக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியையும் தமிழக முதல்வர் அழைத்துக் கொண்டு பெங்களூருவுக்கு செல்ல வேண்டும். அப்போது அணையைக் கட்ட மாட்டோம் என்கிற உறுதிமொழியையும் தமிழக முதல்வர் பெற்று, அதன் பிறகு அவர்களுக்குரிய கூட்டத்திலும் பங்கேற்று வரலாம். வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் பிரச்னைகளை ஒற்றை வரியில் கூறி அரசியல் சித்து விளையாட்டை யாரும் விளையாடக்கூடாது என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com