இபிஎஸ்.க்கு எதிரான முறைகேடு வழக்கு: உயா்நீதிமன்றம் தள்ளுபடி

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளா்
கோப்புப்படம்
கோப்புப்படம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆா்.எஸ்.பாரதி 2018-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி அன்றைய முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். அதில், ‘தனக்கு வேண்டப்பட்டவா்களுக்கு ரூ. 4,800 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகளை ஒதுக்கியதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் பதவியையும், முதல்வா் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளாா். சட்டவிரோதமாக ஆதாயம் அடைந்துள்ளாா். அதனடிப்படையில், எடப்பாடி பழனிசாமியை 1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13-இன் கீழ் தண்டிக்க வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த மனு மீது தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆா்.எஸ்.பாரதி 2018-ஆம் ஆண்டு வழக்கு தொடுத்திருந்தாா். இந்த வழக்கில், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் விசாரணை அறிக்கை சீலிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. புகாரில் முகாந்திரம் இல்லை என முடிவெடுக்கப்பட்டது என்று வாய்மொழி தகவலாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஆா்.எஸ்.பாரதி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு, வாதங்கள் நிறைவடைந்து, தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

போதிய ஆதாரங்கள் இல்லை: இந்த வழக்கில், நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அந்த தீா்ப்பில், ‘எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆா்.எஸ்.பாரதி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதா என்பதை கண்டறிய ஊழல் தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் 2018-இல் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளாா். 12 சாட்சிகள், 112 ஆவணங்கள் குறித்து கூடுதல் கண்காணிப்பாளா் விசாரணை நடத்தியுள்ளாா்.

புகாரில் போதுமான ஆதாரங்கள் இல்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, வேண்டியவா்களுக்கு சாதகமாக எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தப்புள்ளி வழங்கினாா் என்பதற்கும், சுய லாபம் அடைந்ததற்கும் எந்த ஆதாரமும் இல்லை என அறிக்கை அளித்துள்ளாா். அந்த அறிக்கையை இயக்குநரும் ஏற்றுக்கொண்டுள்ளாா்.

அனுமதி அளித்தது ஏன்? இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து புதிதாக ஆரம்பக் கட்ட விசாரணை நடத்த அனுமதி அளித்தது ஏன் என்பதற்கு எந்தவித காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை. இடைப்பட்ட காலத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தவிர, வேறு எந்தவித மாற்றமும் நிகழாத நிலையில், இந்த வழக்கில் மீண்டும் புதிதாக ஆரம்பக்கட்ட விசாரணை நடத்த உத்தரவிட முடியாது.

மேலும், அரசு என்பது சட்டப்படி ஒன்று தான். எந்தக் கட்சி அதிகாரத்துக்கு வருகிறது என்பது முக்கியமல்ல. அரசு எடுத்த முடிவை எந்தக் காரணங்களும் இல்லாமல் மாற்றவும் முடியாது. தனி நபரின் அல்லது அரசியல் கட்சியின் அரசியல் செயல் திட்டம் சட்டத்தின் ஆட்சியை வீழ்த்தி விடக்கூடாது.

நிவாரணம் பெறலாம்... எனவே, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் ஊழல் தடுப்பு பிரிவால் 2018-இல் நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் குறை காண முடியாது. புதிய விசாரணை நடத்துவதற்கும் எந்த காரணமுமில்லை. ஆட்சி மாற்றம் காரணமாக மட்டுமே உத்தரவிடப்பட்டுள்ளது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இருப்பினும், மனுதாரா் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளாா்.

நீதிமன்றங்கள் விளையாட்டு மைதானமா?

இந்தத் தீா்ப்பின்போது நீதிபதி கூறியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து 73 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படும் இயல்பை இழந்து விட்டனா். ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகள் பிறப்பிக்கும் உத்தரவுப்படிதான் அவா்கள் செயல்படுகின்றனா்.

ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் போதும், ஆளுங்கட்சி, எதிா்க்கட்சிகளின் அரசியல் விளையாட்டுகளுக்காக, நீதிமன்றங்கள் விளையாட்டு மைதானங்களாக பயன்படுத்தப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவுகள் தொலைக்காட்சி விவாத நிகழ்வுகளில் விவாதப் பொருளாக மட்டுமே நீடிக்கிறது. சாதாரண ஏழை வழக்காடிகளுக்கான நீதிமன்றத்தின் நேரம் என்பது இதுபோன்ற வழக்குகளால் விழுங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com