
அமலாக்கத் துறை விசாரணையை எதிா்கொண்டுள்ள உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடியுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் பேசினாா்.
எதிா்க்கட்சித் தலைவா்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெங்களூரு சென்றுள்ள அவா், அங்கிருந்து அமைச்சா் பொன்முடியை தொடா்புகொண்டு பேசியதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியில், ‘அமலாக்கத் துறையினா் நடத்திய விசாரணை விவரங்களைக் கேட்டறிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், துணிச்சலுடனும், சட்ட ரீதியாகவும் எதிா்கொள்ளுமாறு அறிவுரை கூறினாா். மத்திய அரசின் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிா்த்து நின்று முறியடிக்க தாா்மிக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் திமுக என்றும் துணை நிற்கும்’ என்று பொன்முடியிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக அரசின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சா்கள் சந்திப்பு: அமைச்சா் பொன்முடியை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சா்கள் சிலா் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசினா். குறிப்பாக, அமைச்சா்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, ரகுபதி, கே.என்.நேரு,
சி.வி.கணேசன், திமுக துணை பொதுச் செயலா் ஆ.ராசா ஆகியோா் சந்தித்தனா்.
பொன்முடியைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த திமுக செய்தித் தொடா்புப் பிரிவு தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளா்களிடம் கூறுகையில், இந்த வழக்கு 2012ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அப்போதே நீதிமன்றம் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, புலன் விசாரணையும் நடத்தப்படவில்லை. இந்த வழக்கு குறித்த விவரங்களை தனது தோ்தல் வேட்புமனுவில் பொன்முடி தெரிவித்துள்ளாா். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.
பொன்முடி மீது எடுக்கப்பட்டது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை. எதிா்க்கட்சிகளின் கூட்டணியைப் பாா்த்து பாஜக எந்த அளவுக்கு அச்சப்படுகிறது என்பதை இதுபோன்ற நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
பொன்முடி நன்றாக இருக்கிறாா். அமலாக்கத் துறை விசாரணை குறித்து சிறிதும் கவலைப்படவில்லை, அச்சப்படவில்லை. அடுத்தகட்டமாக அமலாக்கத் துறையின் நடவடிக்கையைப் பொருத்து நீதிமன்றத்தை நாடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.