செல் ட்ராக்கர் வசதி: 19 நாள்களில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 162 கைப்பேசிகள் மீட்பு!

செல் ட்ராக்கர் எனும் புதிய கூகுள் படிவம் அறிமுகம் செய்யப்பட்டு 19 நாள்களில் திருடுபோன ரூ.35 லட்சம் மதிப்புடைய 162 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 
செல் ட்ராக்கர் வசதி: 19 நாள்களில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 162 கைப்பேசிகள் மீட்பு!

வேலூர்: செல் ட்ராக்கர் எனும் புதிய கூகுள் படிவம் அறிமுகம் செய்யப்பட்டு 19 நாள்களில் திருடுபோன ரூ.35 லட்சம் மதிப்புடைய 162 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

மிகக்குறுகிய காலத்தில் அதிகளவில் கைப்பேசிகளை கண்டுபிடித்து மீட்டதற்காக வேலூர் மாவட்ட காவல் துறை டிஐஜி எம்.எஸ்.முத்துச்சாமி பாராட்டு தெரிவித்தார்.

வேலூர் சரக காவல் துணைத்தலைவர் (டிஐஜி) எம்.எஸ்.முத்துச்சாமி உத்தரவின்பேரில் கைப்பேசிகள் திருடுபோனால் பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு வசதியாக செல் ட்ராக்கர் எனும் புதிய கூகுள்படிவத்தை வேலூர் மாவட்ட காவல் துறை கடந்த ஜூலை 3-ஆம் தேதி அறிமுகம் செய்திருந்தது.

அதாவது, கைப்பேசியை தவறவிட்டவர்கள் 94862 14166 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு "ஹாய்' என்று குறுந்தகவல் அனுப்பினால் போதும், உடனடியாக தங்கள் கைப்பேசிக்கு ஒரு லிங்க் அனுப்பி வைக்கப்படும். அந்த லிங்க்-க்குள் சென்று அதிலுள்ள கூகுள் படிவத்தில் பெயர், முகவரி, களவுபோன கைப்பேசி எண், ஐஎம்இஐ எண் போன்ற விவரங்களை பதிவிட்டால் அந்த தகவல் மாவட்ட சைபர் காவல் பிரிவுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக காணாமல்போன கைப்பேசியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபடுவர்.

இதன்மூலம், பொதுமக்கள் காவல்நிலையம் சென்று காணாமல்போன கைப்பேசி குறித்து புகார் அளிப்பது, சிஎஸ்ஆர் பெறுவதில் நிலவும் காலவிரையம் தவிர்க்கப்படுவதுடன், இதில் நூறு சதவீதம் புகார்கள் பதிவு செய்யப்பட்டு விடுவதால் காவல் நிலையங்களில் புகார் மனு பெறவில்லை என்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் தவிர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், செல் ட்ராக்கர் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு 19 நாள்களில் ரூ.35 லட்சம் மதிப்புடைய 162 கைப்பேசிகளை மீட்கப்பட்டு, அந்த கைப்பேசிகளை வேலூர் சரக டிஐஜி எம்.எஸ்.முத்துச்சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் ஆகியோர் உரியவர்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.

பின்னர் எஸ்பி மணிவண்ணன் கூறுகையில், செல் ட்ராக்கர் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து இதுவரை தமிழகம் முழுவதும் இருந்து 981 புகார்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், வேலூர் மாவட்டத்தில் மட்டும் 371 புகார்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டதில், இதுவரை ரூ.35 லட்சம் மதிப்புடைய 162 கைப்பேசிகள் கண்டுபிடித்து மீட்கப்பட்டுள்ளன. 

மீதமுள்ள கைப்பேசிகளும் விரைவில் மீட்கப்படும். பெறப்பட்ட புகார்களில் பெரும்பாலானவை கைப்பேசிகளை தவறுவிட்டதுதான் என்பதால், கைப்பேசிகள் மீட்கப்பட்ட நிகழ்வில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்றார்.

அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், கோட்டீஸ்வரன், டிஎஸ்பி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கிறார் வேலூர் சரக டிஐஜி எம்.எஸ்.முத்துச்சாமி. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன், டிஎஸ்பி திருநாவுக்கரசு உள்ளிட்டோர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com