தினமணி.காம் செய்தி எதிரொலி: ஜம்பூத்துமலை அரசு தொடக்கப்பள்ளி கட்டடம் புதுப்பிக்கும் பணி தீவிரம்!

ஜம்பூத்துமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டம் புதுப்பிக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது குறித்து தினமணி.காமில் செய்தி வெளியானதால், அதிகாரிகள் முகாமிட்டு பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளனர்.
ஜம்பூத்துமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடம்.
ஜம்பூத்துமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடம்.

வாழப்பாடி:  சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் ஜம்பூத்துமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டம் புதுப்பிக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது குறித்து தினமணி.காமில் செய்தி வெளியானதால், அதிகாரிகள் முகாமிட்டு பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளனர். பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் மாணவர்களும், பெற்றோர்களும் நிம்மதி அடைந்துள்ளனர். 

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் தேக்கல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது ஜம்பூத்துமலை. இந்த மலை கிராமத்தைச் சேர்ந்த  பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் நோக்கில், 1977–ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஏற்படுத்தப்பட்டது. 

6 ஆண்டுகளுக்கு முன்பு வரை சாலை, போக்குவரத்து மற்றும் மின்சார வசதிகள் இல்லாததால், இந்த கிராமத்தில் வசித்து பெரும்பாலான மக்கள் வெளியேறினர். இதனால், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக குறைந்து போனது.  

 ஜம்பூத்துமலையில் அழகிய தோற்றம்.
 ஜம்பூத்துமலையில் அழகிய தோற்றம்.

இந்நிலையில், 5 ஆண்டுக்கு முன்  கிராம மக்களே ஒன்றிணைந்து கரடுமுரடாக காணப்பட்ட ஏறக்குறைய 4 கி.மீ., துார மலைப்பாதையை சீரமைத்தனர். இதனையடுத்து, கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற தமிழக  மின்வாரியம், 2019-ல் மின் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ. 3.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, வனத்துறையின் வாயிலாக கொண்டை ஊசி வளைவுகளுடன் தார்சாலையும் அமைத்து கொடுக்கப்பட்டது. 

மின்சாரம் மற்றும்  சாலை போக்குவரத்துக்கு வசதிகள் கிடைத்ததால், இந்த கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் சொந்த கிராமத்திற்கே திரும்பினர். இதனால், மூடும் நிலையிலுள்ள அரசுப் பள்ளிகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்த இப்பள்ளி புத்துணர்வு பெற்றது. 

இந்நிலையில், பள்ளி கட்டிடமும் பழுதடைந்ததால், கட்டடத்தை புதுப்பிக்க ஊரக வளர்ச்சித்துறை  நிதி ஒதுக்கீடு செய்தது. 

ஆனால், 4 மாதங்கள் கடந்தும் புதுப்பிக்கும் பணிகள் முழுமையடையவில்லை. இதனால், பழங்குடியின மாணவ-மாணவியர்  பள்ளியில் அமர்ந்து படிப்பதற்கு வழியின்றி அவதிக்குள்ளாகினர்.  எனவே, பள்ளி கட்டத்தை புதுப்பிக்கும் பணியை விரைவாக முடித்து கொடுக்க வேண்டுமென, ஜம்பூத்துமலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஜூலை 13-ஆம் தேதி, தினமணி.காமில் படத்துடன் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.


இதனையடுத்து, சேலம் மாவட்டதொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ், வட்டார கல்வி அலுவலர் நெடுமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர்  அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் ஜம்பூத்துமலை பள்ளி கட்டடத்தை  நேரில் சென்று பார்வையிட்டு, புதுப்பிக்கும் பணியை விரைந்து முடித்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டனர். 

இதனையடுத்து, தற்போது  ஜம்பூத்துமலை பள்ளி கட்டடம் புதுப்பிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுமட்டுமின்றி, சேவை சங்கத்தின் சார்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டுமானப்பணியையும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால், மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com