தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

News image
Updated On :25 ஜூலை 2023, 8:26 am

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சூழ்நிலையில், நீண்டகாலமாக நிலவிவரும் இப்பிரச்சினையைத் தீர்க்க தூதரக அளவிலான முயற்சிகளை முடுக்கிவிடுமாறு தான் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், இருப்பினும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து ஆழ்ந்த கவலையுடனும், ஏமாற்ற உணர்வுடனும் இந்தக் கடிதத்தை எழுதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவிற்கு, இலங்கை அதிபர் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சினை குறித்து பிரதமர் விவாதிக்க வலியுறுத்தி இருந்ததாகவும், மீனவர் பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கும், இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களை மதிக்கும் வகையில், ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கும் இலங்கை அதிபருடனான சந்திப்பு வழிவகுக்கும் என தாம் நம்பியதாகவும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படும், கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்வதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களும், அவர்களது  IND-TN11-MM-837, IND-TN11-MM-257 பதிவு எண்கள் கொண்ட 2 விசைப்படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் நேற்று சிறைபிடிக்கப்பட்டுள்ளதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால், அவர்கள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருவதாகவும், இந்தச் சம்பவங்கள் இருதரப்பு உறவுகளை சீர்குலைத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கடுமையான சமூக-பொருளாதார விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்றும் கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது படகுகளை பாதுகாப்பாக திரும்ப ஒப்படைக்கவும் கேட்டுக் கொண்டுள்ள அவர், பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட, இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வு காண வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாகவும், இதுதொடர்பாக சாத்தியமான அனைத்து தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரை கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக, இலங்கை கடற்படையால் படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகளை கண்டித்தும், அதனை தடுத்திட கோரியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி மாநில மாநாடு நடத்தவுள்ளது. இதில், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் விடுத்த அழைப்பினை ஏற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவிருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.