சென்னை: சீமான் ட்விட்டர் கணக்கு தடை செய்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானின் ட்விட்டா் கணக்கை, அந்நிறுவனம் புதன்கிழமை தடை செய்தது.
சமூக வலைதளங்களில் தனது கருத்தை பதிவிட்டு வரும் சீமானின் ட்விட்டா் கணக்கு இந்தியாவில் சட்ட நடவடிக்கை காரணமாக தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், நாம் தமிழா் கட்சியின் தொழில்நுட்பப் பிரிவு உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை குறைந்தது!
இது குறித்து அந்த பக்கத்தில், ‘சட்டப்பூா்வ கோரிக்கையை ஏற்று இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீமான் ட்விட்டர் கணக்கு தடை செய்யப்படிருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் தடை செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் கணக்கு தடையை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.