
சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சாதி ஆணவப் படுகொலைகளில் ஈடுபடும் சாதிவெறியர்களுக்கு ஒரு படிப்பினையாக அமையும் என நம்புகிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம், ஓமலூர் பொறியியல் கல்லூரி பட்டியலின மாணவர் கோகுல்ராஜ் வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக கொடூரமான முறையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு ஜனநாயக இயக்கங்கள் இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்ததுடன் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கிட வேண்டுமென குரலெழுப்பினர்.
இந்த கொடூர குற்றச் செயலில் ஈடுபட்ட யுவராஜூம் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று பின்னர் மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு கடந்த ஆண்டு யுவராஜூக்கும் அவரது கார் ஓட்டுநருக்கும் சாகும் வரை 3 ஆயுள் சிறை தண்டணையும், எஞ்சிய 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவிற்கு எதிராக யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவினை ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சாட்சிகளை தீர விசாரித்ததுடன், குற்றம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். பிறகு இன்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ததுடன், மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளனர். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. இவ்வழக்கில் ஆஜராகி சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர் திரு பாப்பா மோகன் அவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
இத்தீர்ப்பு சாதி ஆணவப் படுகொலைகளில் ஈடுபடும் சாதிவெறியர்களுக்கு ஒரு படிப்பினையாக அமையும் என நம்புகிறோம். சாதி மறுப்பு திருமணம் மற்றும் காதல் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு இல்லாத காரணத்தினால் அடிக்கடி சாதி ஆணவப் படுகொலைகள் நிகழ்கின்றன. சமீபத்தில் கூட கிருஷ்ணகிரியில் சாதி ஆணவப் படுகொலை நடந்தது. நாகரீக சமுதாயத்தில் இதுபோன்ற படுகொலைகள் நடப்பது ஏற்புடையதல்ல. எனவே, தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு தனிச் சட்டம் இயற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என்று கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.