
கோவை: பாஜகவின் அடக்குமுறைகளைக் கண்டு திமுக பயப்படப்போவதில்லை என்றும் திமுகவினர் யார் என்பதை பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கற்றுக் கொடுப்பார் என்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவை பீளமேடு, விளாங்குறிச்சி சாலையில் உள்ள டைடல் பார்க் வளாகத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் தொழில் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி நடைபெற்று வருகிறது. கோவையில் தகவல் தொழில்நுட்பத் துறை மேலும் வளர்ச்சி பெறும் நிலை உள்ளது. தொழில் பூங்காங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் சில பிரச்னைகள் உள்ளன. இருப்பினும் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இதுபோன்ற ஐ.டி. பூங்கா உள்ளிட்டவை தொடர்பான வளர்ச்சிப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
கோவையில் லூ லூ நிறுவனத்தின் கிளை கோவையில் புதன்கிழமை தொடங்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் லூ லூ மால் கொண்டு வர முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே கூறியிருந்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த டி.ஆர்.பி.ராஜா, கோவையில் பெரிய அளவில் லூ லூ ஹைபர் மார்ட் கட்டி இன்று திறந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாஜகவும், மத்திய அரசும் எந்த வேலையையும் செய்யாமல் இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இனியாவது அவர்கள் ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்ய வேண்டும் என்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த டி.ஆர்.பி.ராஜா, திமுக இதைவிட பெரிய அடக்குமுறைகளைக் கண்ட இயக்கம். இதுபோன்ற சவால்களின் மூலம் நாங்கள் இன்னும் வலிமையாக வெளியே வருவோம். திமுகவை அடக்க வேண்டும் என்று நினைத்தால் அது இன்னும் வேகமாக வெளியே வரும்.
நாங்கள் கலைஞரின் வளர்ப்புகள். தளபதியின் வளர்ப்புகள், அவரின் தம்பிகள். இதற்கெல்லாம் பயந்து போகும் ஆட்கள் நாங்கள் கிடையாது. இதெல்லாம் மிகவும் சிறிய விஷயம். பதவியில் இருக்கிறோம் என்பதற்காக அவர்கள் ஆடுகின்றனர். அமைச்சர் செந்தில்பாலாஜி மிகவும் சிறப்பான பணிகளை செய்து கொண்டிருந்தார்.
திமுக மிகச் சிறப்பாக வளர்ந்து கொண்டிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. மக்களுக்காக அயராமல் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். திராவிட மாடல் அரசு மத்திய பாஜக அரசுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது. அதைக் கண்டு அச்சப்பட்டு, தங்களிடம் இருக்கும் துறைகளை பாஜக ஏவி விட்டு திமுகவை ஏதாவது செய்துவிட முடியாதா என்று பார்க்கின்றனர்.
ஆனால் அவர்களுக்கு திமுகவைப் பற்றி தெரியவில்லை. கலைஞரைப் பற்றி தெரியவில்லை. அவர்களுக்கு திமுகவினர் யார் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் கற்றுக் கொடுப்பார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.