தஞ்சாவூரில் மதுக்கடையை முற்றுகையிட்டு கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்!
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை பிற்பகல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து அருகேயுள்ள மாட்டு மேஸ்திரி சந்தின் முகப்பு பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இதனால், இந்த வழியாக பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள், வணிகர்கள் ஆகியோர் செல்வதற்கு மிகவும் இடையூறாக இருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே இக்கடையை மூடக்கோரி பல்வேறு தரப்பினரும் பல முறை உயர் அலுவலர்களிடம் மனுக்கள் அளித்து போராட்டங்களும் நடத்தினர்.

இந்நிலையில், தமிழக அரசு கடந்த வாரம் மூடிய 500 மதுக்கடைகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 கடைகள் மூடப்பட்டன. அப்போது இக்கடையும் மூடப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இந்தக் கடை தொடர்ந்து செயல்படுவதால் மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது.
இதனால் கடையை மூடக்கோரி பூட்டுப் போடும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்தனர். இதன்படி, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை பிற்பகல் ஊர்வலமாகப் புறப்பட்டு மாட்டு மேஸ்திரி சந்தில் உள்ள மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தையொட்டி மதுக்கடை திறக்கப்படவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் இ. வசந்தி தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் மாவட்டச் செயலர் சின்னை. பாண்டியன், மாநகரச் செயலர் எம். வடிவேலன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
தகவலறிந்த நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.என். ராஜா, காவல் ஆய்வாளர்கள் வி. சந்திரா (மேற்கு), கருணாகரன் (கிழக்கு) உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்தையொட்டி மாட்டு மேஸ்திரி தெருவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளை வணிகர்கள் அடைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நிகழ்விடத்துக்கு வந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செல்வ பாண்டியன், வட்டாட்சியர் ஆர். தங்க பிரபாகரன் இக்கடையை மூடுவதற்கு 20 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதன் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
படவிளக்கம்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...