6 ஆவது சுற்றுகள் முடிவு: 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை (மார்ச் 2) 8 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 
6 ஆவது சுற்றுகள் முடிவு: 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை (மார்ச் 2) 8 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6 ஆவது சுற்றுகள் முடிவில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து  முன்னிலையில் இருந்து வருகிறார். 

ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்பட 77 பேர் போட்டியிட்டனர். 

இந்த தேர்தலில் 82,138 ஆண் வாக்காளர்கள், 88, 037 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலத்தினர் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர். தேர்தலில் மொத்தம் 74.79 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. 

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: 
வாக்கு எண்ணிக்கை சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. 

16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக கீழ்த்தரையிலும், முதல் தளத்திலும் 2 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கீழ்த்தரையில் 10 மேஜைகளிலும் முதல் தளத்தில் 6 மேஜைகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

காங்கிரஸ் முன்னிலை: 
ஆறு சுற்று வாக்கு எண்ணிகை முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 46,174 வாக்குகள் பெற்று 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு 16,777 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் 2964 வாக்குகள் பெற்ற மூன்றாவது இடத்திலும், தேமுதிக 431 வாக்குகள் பெற்று அடுத்த இடத்தில் உள்ளனர். 

முதல் சுற்று முடிவில் தேமுதிக வேட்பாளர் ஆன்ந்தை விட சுயேட்சை வேட்பாளர் முத்துபாலா அதிக வாக்குகள் பெற்றுள்ளார். 

தேமுதிக வேட்பாளர் 112 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் 178 வாக்குகளும் பெற்றுள்ளார்.

முதல் சுற்றில் நோட்டாவுக்கு 23 வாக்குகள் கிடைத்துள்ளது. 

ஏழாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 4 ஆவது சுற்று வாக்கு எண்ணும் நடைபெற்று வந்த நிலையில், வாக்கும் எண்ணும் மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறினார். 

வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக சார்பாக அவர் மட்டுமே இருந்த நிலையில் விரக்தியில் வெளியேறினார். 

வாக்கு எண்ணும் மையத்தில் வெளியேறிய அதிமுக வேட்பாளர் தென்னரசு, பணநாயகம் வென்றது, ஜனநாயகம் தேற்றது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டு காரில் புறப்பட்டு சென்றுவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com