முதல் வகுப்பு கேட்கும் பயணிகள்: கைவிரிக்கிறதா மெட்ரோ ரயில் நிர்வாகம்?

மெட்ரோ ரயிலில் முதல் வகுப்புப் பெட்டிகளை மீண்டும் இணைக்க வேண்டும் என்பது ரயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
முதல் வகுப்பு கேட்கும் பயணிகள்: கைவிரிக்கும் மெட்ரோ ரயில் நிர்வாகம்
முதல் வகுப்பு கேட்கும் பயணிகள்: கைவிரிக்கும் மெட்ரோ ரயில் நிர்வாகம்
Published on
Updated on
2 min read

சென்னை: சென்னை சென்டிரல்  - விம்கோ நகர் இடையே இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க சென்னை மெட்ரோ ரயில் லிமிடட் முடிவு செய்திருந்தாலும், அதில் முதல் வகுப்புப் பெட்டிகளை மீண்டும் இணைக்க வேண்டும் என்பது ரயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

சென்னை சென்டிரல் - விம்கோ நகர் இடையே இயக்கப்படும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு முதல் கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, நாள்தோறும் அலுவலகம் செல்லும் பயணிகள் குறிப்பாக பெண்கள், மீண்டும் இந்த வழித்தடத்தில் சிறப்பு அல்லது முதல் வகுப்புப் பெட்டிகளை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

சாதாரண மெட்ரோ ரயில் கட்டணத்தை விட, முதல் வகுப்புப் பெட்டிக்கான கட்டணம் இரண்டு மடங்காக இருந்தாலும் கூட, காலையில் கூட்ட நெரிசலில் சிக்காமல் செல்ல இரண்டு மடங்கு கட்டணம் கொடுக்கவும் பலரும் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கரோனா பேரிடர் காலத்தில் முதல் வகுப்புப் பெட்டி, மெட்ரோ ரயிலுடன் இணைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் அது மகளிர் மட்டும் பெட்டியாக மாற்றப்பட்டது.

முக்கிய பகுதியாக விளங்கும் அண்ணா நகர் - சென்னை சென்டிரல் வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலைக் காட்டிலும், சென்டிரல் - விம்கோ நகர் இடையே இயக்கப்படும் மெட்ரோ ரயிலில்தான் கூட்டம் அலைமோதுகிறது. சில ரயில்களில் நிற்கக் கூட இடமில்லாமல் கூட்டம் நிரம்பி வழிவதாக நாள்தோறும் அதில் பயணிப்பவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, நாள்தோறும் இந்த கூட்ட நெரிசலில் சிக்குவதற்கு பதிலாக முதல் வகுப்புப் பெட்டியை அறிமுகப்படுத்தினால் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தவும் தயாராக இருப்பதாக அலுவலகம் செல்வோர் பலரும் கூறுகிறார்கள்.

ஒரே நேரத்தில் அலுவலகம் செல்வோர் மெட்ரோ ரயில் நிலையங்களில் குவியும் போது கடுமையான நெரிசல் ஏற்படுவதாகவும் இதனைத் தவிர்க்க ஒரு மணி நேரம் முன்னதாகவே ரயில் நிலையம் வர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் சிலர் புலம்புகிறார்கள். நாள் ஒன்றுக்கு இந்த வழித்தடத்தில் மட்டும் சுமார் 2 முதல் 2.5 லட்சம் பயணிகள் பயணிப்பதாக தரவுகள் கூறுகின்றன. இது வார இறுதி நாள்களில் குறைவதற்கு பதிலாக கூடவே செய்கிறதாம்.

இந்த நிலையில்தான், கூட்டத்தைக் கட்டுப்படுத்த தற்போது நான்கு பெட்டிகளுடன் இயக்கப்படும் மெட்ரோ ரயிலை 6 பெட்டிகள் கொண்டதாக மாற்ற மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. 42 முறை 4 பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்படுகிறது. இது தற்போதைய பயணிகளின் கூட்டத்தை எதிர்கொள்ள போதுமானதாக இல்லை. எனவே 240 பெட்டிகள் அதாவது 6 பெட்டிகள் கொண்ட ரயில்கள் 40 முறை 2.5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. எனவே புதிய ரயில் பெட்டிகளை வாங்குவதற்கான திட்டப் பணிகள் மற்றும் சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. 

பயணிகளின் கோரிக்கையை ஏற்று முதல் வகுப்புப் பெட்டிகள் இணைக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருப்பதாகவும், அதில் குறைவான பயணிகளே பயணிப்பார்கள் என்று கூறி முதல் வகுப்புப் பெட்டிகள் கோரிக்கை புறக்கணிக்கப்படலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமல்ல, நாட்டில் இதுவரை எந்த மெட்ரோ ரயிலிலும் எக்ஸிக்யூட்டிவ் அல்லது முதல் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com