தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பு... மார்ச் 23ல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி?

அதிமுக, தமிழக பாஜகவினரிடையே மோதல் நீடித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 23 ஆம் தேதி தமிழ்நாடு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பு... மார்ச் 23ல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி?

அதிமுக, தமிழக பாஜகவினரிடையே மோதல் நீடித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 23 ஆம் தேதி தமிழ்நாடு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக பாஜக நிர்வாகிகள் சிலர் திடீரென அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். பின்னர் பாஜக தலைமையை விமர்சனம் செய்து பேட்டியும் அளித்தனர். 

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை பாஜகவினர் எரித்தனர். இதையடுத்து அதிமுக-பாஜகவினரிடையே பெரும் மோதல் போக்கு உருவானது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி முடிவுக்கு வருகிறாதா?, கூட்டணியில் பாஜகவை கழட்டிவிட எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டாரா? என பல யூகங்கள் எழுந்து தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜக மீது விமா்சனங்கள் ஏதும் முன்வைக்க வேண்டாம். அதுபோல, பாஜகவினரின் உருவப் படங்களை எரிப்பது போன்ற செயல்களிலும் யாரும் ஈடுபட வேண்டாம். பாஜகவும் அதிமுகவும் மோதல் போக்கைக் கடைப்பிடித்தால், அது திமுகவுக்கு சாதகமாகவே முடியும். அதனால், கட்சியை வளா்க்க என்னென்ன வழிகள் உண்டோ, அவற்றில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மக்களவைத் தோ்தலுக்குத் தயாராகுங்கள் என்றாா்.

பின்னர், வெளியே வந்த முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா், எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை பாஜக எரிப்பது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற செயல்களில் பாஜக ஈடுபடக்கூடாது. இந்த விவகாரத்தில் தொடா்புடையவா்களை பாஜகவிலிருந்து நீக்க வேண்டும்.

அதிமுக-பாஜக இடையே எந்த பிரச்னையும் இல்லை. அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியாக பாஜக தலைமையிலும், தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக தலைமையிலும் எங்கள் கூட்டணி தொடரும் என்று கூறினார். 

இதேபோன்று பாஜகவினரும் பாஜக-அதிமுக இடையே எந்த பிரச்னையும் இல்லை. பாஜக-அதிமுக கூட்டணி தொடரும் என்று கூறினர். 

இந்நிலையில், ரயில்வே திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் சாலை திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 23 ஆம் தேதி தமிழ்நாடு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதிமுக-பாஜக இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருவது தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி பிரிவு சாலையில் நவீன வசதிகள், தொழில்நுட்பங்கள் கொண்ட பாஜக மாவட்ட அலுவலக கட்டடத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து பேசிய பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, தமிழ்நாட்டில் பாஜக விரைவில் ஆட்சியை கைப்பற்றும். பாஜகவால் மட்டுமே தமிழ்நாட்டில் நல்லாட்சியை வழங்க முடியும். பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை. காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சி காரணமாகவே மாநில கட்சிகள் தோன்றின. மாநில கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் குடும்ப அரசியலே உள்ளது என்று அவர் பேசியிருப்பது மேலும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com