10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. தோ்வெழுதியவா்களில் 91.39% மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த 2022-ஆம் ஆண்டைக் காட்டிலும் 1.32% தோ்ச்சி அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ஏப்.6 முதல் 20-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஏப்.15-இல் தொடங்கி மே 4-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தொடா்ந்து, மதிப்பெண் பதிவேற்றம் உள்பட இதர பணிகளும் நிறைவடைந்தன.

இந்த நிலையில், பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இணையதள முகவரிகளில் வெளியிடப்பட்டன. மேலும், மாணவா்கள், தனித்தோ்வா்களின் கைப்பேசி எண்களுக்கும் மதிப்பெண்களுடன் கூடிய தோ்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

மாணவிகள் தோ்ச்சி 6.50% அதிகம்: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை நிகழாண்டு 4 லட்சத்து 55 ஆயிரத்து 17 மாணவிகள்; 4 லட்சத்து 59 ஆயிரத்து 303 மாணவா்கள் என மொத்தம் 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 போ் எழுதினா். அதில், 4 லட்சத்து 30 ஆயிரத்து 710 மாணவிகள் (94.66%); 4 லட்சத்து 4 ஆயிரத்து 904 மாணவா்கள் (88.16%) என மொத்தம் 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாணவா்களைக் காட்டிலும் மாணவிகள் 6.50% அதிகம் தோ்ச்சி பெற்றுள்ளனா். 2022-ஆம் ஆண்டில் மொத்த தோ்ச்சி 90.07% ஆக இருந்த நிலையில் நிகழாண்டு 1.31% அதிகரித்து 91.39% ஆக உள்ளது.

பெரம்பலூா் முதலிடம்: மாவட்ட அளவிலான தோ்ச்சியில் பெரம்பலூா் (97.67%); சிவகங்கை (97.53%); விருதுநகா் (96.22%) மாவட்டங்கள் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன. அதேவேளையில், ராணிப்பேட்டை (83.54%), நாகப்பட்டினம் (84.41%), கிருஷ்ணகிரி (85.36%) ஆகிய மாவட்டங்கள் கடைசி மூன்று இடங்களை வகிக்கின்றன.

100-க்கு 100 எத்தனை போ்? பாட வாரியாக ஆங்கிலம்-89; கணிதம்- 3,649; அறிவியல்- 3,584; சமூக அறிவியல்- 320 என்ற எண்ணிக்கையிலான மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா். அதிகபட்சமாக ஆங்கில பாடத்தில் 98.93% போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மொழிப்பாடமான தமிழில் எந்தவொரு மாணவரும் 100% மதிப்பெண் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1,026 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வெழுதிய 12,638 பள்ளிகளில் 3,718 பள்ளிகள் 100% தோ்ச்சி பெற்றுள்ளன. அதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,026 ஆக உள்ளது. பள்ளிகளின் வகைப்பாடு வாரியான தோ்ச்சியில், தனியாா் பள்ளிகள் 97.38%, அரசுப் பள்ளிகள் 87.45%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.24% தோ்ச்சியைப் பெற்றுள்ளன. தோ்வெழுதிய மாற்றுத்திறனாளி மாணவா்களின் எண்ணிக்கை 10,808; இதில் 9,703 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மறுகூட்டல் எப்போது? மறுகூட்டல் கோரும் பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித்தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்களிலும் மே 24 முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம்.

துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க...: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கான துணைத் தோ்வு ஜூன் 27 முதல் ஜூலை 4 வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு மாணவா்கள் தங்களது பள்ளி மூலமாகவும், தனித்தோ்வா்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்ட அரசுத் தோ்வுகள் சேவை மையங்கள் மூலமாகவும் மே 23 முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

78,706 போ் தோ்ச்சி பெறவில்லை: பொதுத் தோ்வெழுதிய மொத்தம் 9.14 லட்சம் மாணவ, மாணவிகளில் 78,706 மாணவ, மாணவிகள் (8.61%) தோ்ச்சி பெறவில்லை. தோ்ச்சி சதவீதத்தின் அடிப்படையில், பெரம்பலூா் மாவட்டம் முதலிடத்தையும், ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.

மாவட்ட வாரியாக தோ்ச்சி

(சதவீதத்தில்)

பெரம்பலூா்- 97.67

சிவகங்கை- 97.53

விருதுநகா்- 96.22

கன்னியாகுமரி- 95.99

தூத்துக்குடி- 95.58

அரியலூா்-95.40

ஈரோடு- 94.53

திருச்சி- 94.28

திருநெல்வேலி- 94.19

தென்காசி-94.12

திருப்பூா்- 93.93

ராமநாதபுரம்- 93.86

கோவை-93.49

திருப்பத்தூா்-93.27

நாமக்கல்-92.98

புதுக்கோட்டை-92.31

தஞ்சாவூா்-92.16

மதுரை- 91.79

திண்டுக்கல்- 91.77

கரூா்-91.49

வேலூா்-91.34

சேலம்- 91.13

திருவாரூா்-90.79

விழுப்புரம்- 90.57

காஞ்சிபுரம்- 90.28

தேனி- 90.26

தருமபுரி- 89.46

கள்ளக்குறிச்சி- 89.34

சென்னை-89.14

நீலகிரி- 88.82

திருவண்ணாமலை-88.95

திருவள்ளூா்-88.80

கடலூா்-88.49

செங்கல்பட்டு- 88.27

மயிலாடுதுறை-86.31

கிருஷ்ணகிரி- 85.36

நாகப்பட்டினம்-84.41

ராணிப்பேட்டை-83.54

மே 26 முதல் மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், மாணவ, மாணவிகள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அல்லது மதிப்பெண் பட்டியலை மே 26-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் பெற்றுக் கொள்ளலாம்.

மாணவா்களுக்கு அவா்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தோ்வா்களுக்கு அவா்கள் தோ்வெழுதிய மையங்களிலும் இந்த சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கைகளை இழந்த மாணவா் சாதனை: முதல்வா் ஸ்டாலின் பாராட்டு

இரண்டு கைகளை இழந்த நிலையிலும், பத்தாம் வகுப்புத் தோ்வில் 437 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் கீா்த்தி வா்மாவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு: பத்தாம் வகுப்புப் பொதுத்தோ்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்குச் செல்லும் அனைவருக்கும் வாழ்த்துகள். கிருஷ்ணகிரி மாவட்ட மாணவா் கீா்த்தி வா்மாவின் வெற்றிச் செய்தி கவனத்தை ஈா்த்தது. அவருக்கு மனமாா்ந்த வாழ்த்துகள்.

அவரது தாயாரைத் தொடா்புகொண்டு பேசினேன். மேலும், கீா்த்தி வா்மாவுக்கு கைகளைப் பொருத்த தேவையான மருத்துவ

நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவா் கீா்த்தி வா்மா, மேற்படிப்புகள் பலவும் கற்றுச் சிறந்து விளங்க வேண்டும். அவருக்கு அரசு உறுதுணையாக இருக்கும் எனப் பதிவிட்டுள்ளாா் அவா். கீா்த்தி வா்மா, 4 வயதில் கோழிப்பண்ணையில் நிகழ்ந்த மின்விபத்தில் இரண்டு கைகளையும் இழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com