மன்னார்குடி அருகே சேந்தமங்கலம் பெரியக்குடி ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுக்கு தளவாட சாமான்களுடன் வந்தால் சிறைபிடிக்கப்பட்ட ஒஎன்ஜிசி கனரக வாகனங்கள்
மன்னார்குடி அருகே சேந்தமங்கலம் பெரியக்குடி ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுக்கு தளவாட சாமான்களுடன் வந்தால் சிறைபிடிக்கப்பட்ட ஒஎன்ஜிசி கனரக வாகனங்கள்

மன்னார்குடி அருகே ஓஎன்ஜிசி வாகனங்கள் சிறைபிடிப்பு!

மன்னார்குடி அருகே எண்ணெய் கிணறு அமைக்கும் தளவாடப் பொருட்களுடன் வந்த ஓஎன்ஜிசி கனரக வாகனங்கள் சிறைபிடிப்பு
Published on

மன்னார்குடி அருகே செயல்பாடின்றி உள்ள ஓஎன்ஜிசி ஆழ்துளை எரிவாயு எண்ணெய் கிணறு உள்ள இடத்திற்கு ராமநாதபுரத்திலிருந்து தளவாடப் பொருட்களுடன் வந்த 8 ஓஎன்ஜிசி கனரக வாகனங்களை பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் அமைப்பினர் வெள்ளிக்கிழமை சிறைபிடித்தனர்.

கோட்டூர் அடுத்துள்ள சேந்தமங்கலம் பெரியக்குடியில் ஓஎன்ஜிசி சார்பில் பூமிக்கடியிலிருந்து எண்ணெய் எடுப்பதற்காக இரண்டு இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்றுவந்தது. இதில், கடந்த 2013 ஆம் ஆண்டு அதிக அழுத்தம் ஏற்பட்டு எரிவாயு கசிவு ஏற்படுவதாக கூறி பணி நிறுத்தப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக செயல்பாடின்றி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த அக்டோபேர் மாதம் செயல்பாடின்றி உள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து எரிவாயு வெளியேறுவதாக அப்பகுதியில் வசிப்பவர்களும், விவசாயிகளும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, காரைக்கால் ஓஎன்ஜிசி பொறியாளர்கள் குழு மற்றும் நாகை மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவினர் சேந்தமங்கலம் பெரியக்குடிக்கு வந்து செயல்படாத ஓஎன்ஜிசி ஆழ்துளை கிணற்றினை சோதனை செய்ததில் இதிலிருந்து எரிவாயு கசிவு ஏற்படவில்லை என்றும், அழுத்தம் காரணமாக காற்று வெளியேறுவதாக தெரிவித்ததையடுத்து பிரச்னை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை ராமநாதபுரத்திலிருந்து சேந்தமங்கலம் பெரியக்குடி ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு பகுதிக்கு ஆழ்துளை அமைக்கும் தளவாட சாமான்களை ஏற்றிக்கொண்டு ஓஎன்ஜிசியின் 8 கனரக வாகனங்கள் வந்தது.

இதுகுறித்து தகவலறிந்த பேரழிவுக்கு எதிரான பேரியக்கத்தின் மாநில துணைத் தலைவர் ரபீக் தலைமையில் அந்த அமைப்பினை சேர்ந்தவர்கள் பெரியக்குடி கடைவீதியில் அவற்றை மறித்து, வாகனங்கள் மேற்கொண்டு செல்லக் கூடாது என கூறி சிறைப்படுத்தினர்.

தகவலறிந்து, நிகழ்விடத்திற்கு வந்த விக்கிரபாண்டியம் காவல் உதவி ஆய்வாளர் சங்கரன் ஆகியோர் வாகனங்களை சிறைப்பிடித்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பெரியக்குடி எரிவாயு எண்ணெய் கிணறு குறித்து ஓஎன்ஜிசி நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், எண்ணெய் எடுக்கும் பணியினை தொடங்கினால் இப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்து வீடுகட்டி தந்த பின் பணியினை தொடரலாம் என தெரிவித்தனர்.

இதுபற்றி, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டது. எனினும், பேச்சுவார்த்தை முடிவுக்கு பிறகே வாகனங்கள் விடுவிக்கப்படும் என சிறைப்பிடித்த அமைப்பினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com