பண மோசடி? நடிகை நமீதாவின் கணவருக்கு சம்மன்!

பண மோசடி? நடிகை நமீதாவின் கணவருக்கு சம்மன்!

பாஜக நிர்வாகியும் நடிகை நமீதாவின் கணவருமான வீரேந்திர சௌத்ரிக்கும் பாஜக மாநில ஊடகப் பிரிவு தலைவர் மஞ்சுநாத்துக்கும் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சேலம் எம்.எஸ்.எம்.இ. தொழில் கூட்டமைப்பு விவகாரம் தொடர்பாக
பாஜக நிர்வாகியும் நடிகை நமீதாவின் கணவருமான வீரேந்திர சௌத்ரிக்கும் பாஜக மாநில ஊடகப் பிரிவு தலைவர் மஞ்சுநாத்துக்கும் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். 

அரசு முத்திரையை தவறாக பயன்படுத்துதல் மற்றும் ஏமாற்றும் முறையில் நடந்து கொண்டதாக வந்த புகாரில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை..

சேலத்தில் கடந்த வாரம் நடைபெற்ற எம்.எஸ்.எம்.இ. ப்ரோமோஷன் கவுன்சிலிங் என்ற அமைப்பின் நிகழ்ச்சியில் அமைப்பின் தேசிய தலைவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துராமன், தேசிய செயலாளர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துஷ்யந்த் யாதவ், நடிகை நமீதாவின் கணவரும் பாஜக பிரமுகரும் அமைப்பின் தமிழ்நாடு சேர்மனுமான வீரேந்திர சௌத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் நடிகை நமீதாவும் கலந்துகொண்டார். 

மேலும் வங்கி அலுவலர்கள், தொழில் முனைவோர் என 100-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த நிறுவனம் ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அரசு முத்திரையை தவறாகப் பயன்படுத்துவதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் சூரமங்கலம் சரக காவல் உதவி ஆணையாளர் மற்றும் சூரமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோர், முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

தொடர்ந்து நடைபெற்ற காவல்துறை விசாரணையில், தேசிய தலைவராக உள்ள முத்துராமன் என்பவர் 3 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவர் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரராக செயல்பட்டு வருகிறார் அவ்வப்போது தில்லி செல்லும்போது பஞ்சாபைச் சேர்ந்த துஷ்யந்த் யாதவுடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு இந்த அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு தன்னுடைய விசிட்டிங் கார்டு மற்றும் காரில் அசோகச் சின்னம் மற்றும் தேசியக் கொடியை பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது. 

அதேபோன்று பஞ்சாபச்  சேர்ந்த யாதவ் இளம் அறிவியல் பட்டப்படிப்பு படித்ததாகவும் முத்துராமனுடன் சேர்ந்து கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு இந்த அமைப்பை பதிவு செய்து வங்கி அலுவலர்களை அழைத்து தொழில் முனைவோர்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சி நடத்துவதாகவும் முதலில் சென்னை, மதுரை, தற்போது சேலத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் தேசியக்கொடி மற்றும் அரசு முத்திரையை தவறாகப் பயன்படுத்தியதைப் போன்று பண மோசடி போன்ற ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனரா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட முத்துராமனுக்கும் நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சௌத்ரிக்கும் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி அவரை விசாரிக்க ஆஜராகுமாறு சேலம் சூரமங்கலம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். 

இதேபோல பாஜக மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் மஞ்சுநாத்துக்கும்  வருகிற 14 ஆம் தேதி சேலம் சூரமங்கலம் காவல்நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com