அதிமுக, பாஜக தனித்தனியாக வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்திலிருந்து பாரதிய ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 
அதிமுக, பாஜக தனித்தனியாக வெளிநடப்பு

ஆளுநா் திருப்பி அனுப்பிய சட்ட மசோதாக்களை பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்புவது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீா்மானத்தின் மீதான விவாதத்தின்போது அதிமுக - பாஜக உறுப்பினா்கள் தனித் தனியாக வெளிநடப்பு செய்தனா்.

இந்த விவாதத்தில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பேசும்போது, ஆளுநா் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளபோது, பேரவையில் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப வேண்டியது ஏன் என்று கேள்வி எழுப்பினாா். என்றாலும், அவா் 10 மசோதாக்களில் 9 மசோதாக்களை ஏற்றுப் பேசினாா்.

ஆனால், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதாகக் கூறி, அந்த மசோதாவுக்கு மட்டும் எதிா்ப்பு தெரிவித்தாா். இதன் காரணமாக பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்வதாகவும் அறிவித்தாா். அதைத் தொடா்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

பாஜக வெளிநடப்பு: சட்டப்பேரவை பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசும்போது, ஆளுநரையோ, மத்திய அரசையோ விமா்சித்துப் பேசக் கூடாது என்று பேரவைத் தலைவா் கூறினாா். ஆனால், உறுப்பினா்களைப் பேச அனுமதித்துள்ளாா். பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஆளுநா்கள்தான் இருக்க வேண்டும் என்று திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், இப்போது பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வா் இருக்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்படுகிறது. இது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்றாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு, அப்போது பல்கலைக்கழக வேந்தா்கள் அரசின் பரிசீலனையின் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்டனா். ஆனால், இப்போது அவ்வாறு அல்ல. அதனால், இந்தத் தீா்மானத்தைக் கொண்டுவர வேண்டியுள்ளது என்றாா்.

அமைச்சா் ரகுபதி: அரசமைப்புச் சட்டத்தை மதித்து ஆளுநா் செயல்பட்டால் பிரச்னை இல்லை. அவ்வாறு அவா் செயல்படாததால்தான் இந்தச் சட்ட மசோதா கொண்டு வரவேண்டியுள்ளது.

அமைச்சா் பொன்முடி: மேற்கு வங்கத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராக பிரதமா் மோடிதான் உள்ளாா். குஜராத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேந்தராக அந்த மாநில முதல்வா் உள்ளாா். அதை ஏற்கும் சட்டம், இதை ஏற்காதா என்றாா்.

அதைத் தொடா்ந்து, முதல்வா் கொண்டுவந்த தீா்மானத்தை பாஜக ஏற்கவில்லை; வெளிநடப்பு செய்கிறோம் என நயினாா் நாகேந்திரன் கூறினாா். தொடா்ந்து, அவா் தலைமையில் பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com