10 ஆண்டுகளாகக் கிடப்பிலுள்ள செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலம்!

செவ்வாப்பேட்டையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகும் நிலையில், விரைவில் முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
10 ஆண்டுகளாகக் கிடப்பிலுள்ள செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலம்!
Published on
Updated on
2 min read

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டையில் ரூ.24.50 கோடியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகும் நிலையில், விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை - திருவள்ளூர் செல்லும் வழியில் செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையம் வழியாக நாள்தோறும் 160 மின்சார புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் சென்று திரும்புகின்றன. இங்கிருந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளுக்கு பணிக்காக 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரையில் பயணித்து வருகின்றனர். 

இந்த ரயில் நிலையம் வழியாக சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருமழிசை - ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலை இணைக்கும் சாலை செல்கிறது. இங்கு நாள்தோறும் 160-க்கும் மேற்பட்ட ரயில்கள் ஒவ்வொரு அரைமணிநேரத்திற்கும் செல்வதால் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால், தொழிற்சாலைகளுக்கு சரக்குகள் கொண்டும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்துகள் அடிக்கடி நிறுத்தப்படுகிறது. இதனால் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளதால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் மிகவும் அவதிக்குள்ளாக வேண்டியுள்ளது. 

இதற்கிடையே திருவள்ளூருக்கு 12 கி.மீ அல்லது 14 கி.மீ தூரத்தில் திருநின்றவூர் வழியாக செல்வதால் காலநேர விரையம் ஆகிறது.

இதுபோன்றவைகளை தவிர்க்கும் வகையில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் எளிதாக கடக்கும் வகையில் மேம்பாலவும் அமைக்க கோரிக்கை எழுந்தது. இக்கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத்துறை கடந்த 2011 இல் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே 10134 சதுர அடி பரப்பளவில், ரூ.24.50 கோடி ஒதுக்கீடு செய்து 2013-க்குள் முடிக்கவும் திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டன. 

ஆனால் இதுவரையில் பணிகள் முழுமையடையாமல் அரைகுறையாகவே உள்ளன. அதேபோல் சுரங்கப்பாதையிலும் மழை நீர் தேங்குவதால் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. அதனால் மேம்பாலப் பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் என்ற கோரிக்கையும் எழந்துள்ளது.

இதுகுறித்து ரயில் பயணிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி பாஸ்கர் கூறியதாவது: 

சென்னையிலிருந்து திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம், குமிடிப்பூண்டி, வேளச்சேரி, பட்டாபிராம் வழியாக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு ரயில் நிலையங்களில் மின்தூக்கி வசதியோ , நகரும் படிகட்டுகளோ இருப்பதில்லை. அதேபோல் மேம்பால வசதியும் கிடையாது. எனவே மாற்று திறனாளிகள், முதியவர்கள் தண்டாவளத்தை கடந்து எளிதாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறுகிறார்கள். இதுபோன்று செல்லும் போது எதிர்பாரத நேரங்களில் விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கின்றனர். ஆனால் மேம்பாலம் வசதியில்லாத நிலையில்தான் வேப்பம்பட்டு ரயில் நிலை தண்டவாளத்தை கடந்த போது 3 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.

இதேபோல், மேம்பால வசதியில்லாததால் செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்திலும் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதற்காக இந்த ரயில் நிலையத்தில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வந்தது. இதுவரையில் 60 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. அதைத் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளாமல் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர். அதற்கு காரணம் மேம்பாலம் அமைக்க நிலம் வழங்கியோர் அரசு வழிகாட்டி மதிப்பை விட கூடுதலாக தொகை கேட்பதாகவும் கூறப்படுகிறது. 

எனவே பொதுமக்கள் நலன் கருதி மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவே பொதுமக்கள் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், பெயர் கூற விரும்பாத நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஒருவர் கூறியதாவது:

இதுவரையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளது. எனவே மீதமுள்ள பணிகளுக்கு நிலம் கையகப்படுத்திய நிலையில், நில உரிமையாளர்கள் கூடுதல் தொகை கேட்கிறார்கள். அதனால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com