இது தொடர்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கிற வகையில் ஒரே நாடு ஒரே கலாச்சாரம், ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே நீட் தேர்வு, என அரசமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநில உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து, தேசிய மருத்துவ ஆணையம் மாநிலங்களில் மருத்துவ படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கையை மக்கள் தொகைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த முடிவு மருத்துவத்துறையில் முன்னேறிய மாநிலங்களாக இருக்கிற தென்னகத்தை சேர்ந்த தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிற மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிற செயலாகும்.