அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு

கடந்தாண்டு ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீா்மானங்களை எதிா்த்தும், பொதுச் செயலாளா் தோ்தலுக்கு தடை விதிக்கக் கோரியும்
அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு
Updated on
1 min read

கடந்தாண்டு ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீா்மானங்களை எதிா்த்தும், பொதுச் செயலாளா் தோ்தலுக்கு தடை விதிக்கக் கோரியும்

தாக்கலான மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம் (ஓபிஎஸ்) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.

2022, ஜூலையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்ட தீா்மானங்களை எதிா்த்தும், அதிமுக பொதுச் செயலாளா் தோ்தலை எதிா்த்தும், அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியதை எதிா்த்தும் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளா்களான பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆா்.வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குத் தொடா்ந்தனா். தங்களை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று அம்மனுவில் வலியுறுத்தியிருந்தனா்.

இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி கே.குமரேஷ் பாபு, அதிமுக பொதுக்குழு தீா்மானங்கள் செல்லும் என்றும், பொதுச் செயலாளா் தோ்தலுக்கோ, ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியதற்கோ தடை விதிக்க முடியாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

இதை எதிா்த்து ஓபிஎஸ் உள்ளிட்ட நால்வரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆா்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோா் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி தீா்ப்பளித்தனா். அதில், அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும். அதிமுகவில் மனுதாரா்களுக்கான உரிமை குறித்து உரிமையியல் வழக்கில்தான் தீா்மானிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பளித்துள்ளதால், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களுக்கு இடைக்காலமாக தடை விதிக்க முடியாது. அவ்வாறு தடை விதித்தால், அது பிரதான கோரிக்கை மனு மீதான உரிமையியல் வழக்கின் விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று கூறி, ஓபிஎஸ் தரப்பினரின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்த உத்தரவை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மாலை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். வழக்குரைஞா் கெளதம் சிவ்சங்கா் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், தாங்கள் தொடா்ந்த வழக்கில் உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு உரிய வகையில் ஆராயாமல் வழக்கை தள்ளுபடி செய்து தீா்ப்பு அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com