திருவாடானை வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!

திருவாடானை தாலுகா அலுவலகம் வாயில் முன்பாக பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கக்கோரி 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை முற்றுகை போராட்டம்
திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை முற்றுகை போராட்டம்
Published on
Updated on
1 min read

திருவாடானை தாலுகா அலுவலகம் வாயில் முன்பாக பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கக்கோரி 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இக்கூட்டத்திற்கு விவசாயச் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் திருவெற்றியூர் கவாஸ்கர், கோடனூர் ராஜா, ஆதியூர் தம்பிராஜ் தலைமையில்  தாலுகா அலுவலகம் வாயில் முன்பாக விவசாயிகள் முற்றுகை போராட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.  

இதில் ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானை, ஆர்எஸ் மங்கலம் வட்டாரங்களில் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படாத 57 வருவாய் கிராமங்களுக்கும் உடனடியாக காப்பீடு வழங்கிட மாவட்ட ஆட்சியர் மற்றும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்வதற்கு அரசு நிறுவனங்களைத் தேர்வு செய்ய வேண்டும், தனியார் நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது. பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான விதிமுறைகள் காப்பீடு நிறுவனங்களுக்கு சாதகமாகவே உள்ளது விவசாயிகளைப் பாதிக்கும் விதிமுறைகளைத் திருத்தி விவசாயிகள் முழுமையாகப் பயனடையச் செய்ய வேண்டும்.

குறிப்பாக இவ்வருட பயிர் அறுவடை  சராசரி கணக்கின்படி கொடுக்காமல் கடந்த ஐந்து வருட சராசரியுடன் ஒப்பிட்டு வழங்குவது ஏற்புடையது அல்ல. உட்கட்டைக்  கிராமங்கள் அல்லது கண்மாய் பாசனப்பகுதி வாரியாக பயிர்க் காப்பீடு வழங்குவதற்கு உண்டான பயிர் அறுவடை சோதனை செய்ய வேண்டும்.

பயிர் அறுவடை சோதனை நடத்தும் பகுதிகளில் சம்பந்தப்பட்ட கிராம விவசாயிகள் முன்னிலையிலேயே நடத்தப்பட வேண்டும். வறட்சி நிவாரணம் மற்றும் கடன் தள்ளுபடிகளில் சிறு, குறு, பெரிய விவசாயிகள் என்ற பேதமின்றி அனைத்து விவசாய நிலங்களுக்கும் வழங்க வேண்டும்.

ஏரியூரிலிருந்து எலுவங்கோட்டை வழியாக திருவாடானை வட்டார கண்மாய்களுக்கு வரும் வரத்துக் கால்வாயைச் சீர் செய்ய பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாத நிலையில் உள்ள இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com