வண்டலூர் பூங்காவில் நுழைவுக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக் கட்டண உயர்வு இன்று(சனிக்கிழமை) அமலுக்கு வந்தது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக் கட்டண உயர்வு இன்று(சனிக்கிழமை) அமலுக்கு வந்தது. 

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் ரூ.115-லிருந்து ரூ.200-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெளிநாட்டினருக்கான நுழைவுக்கட்டணம் ரூ.315 குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவுக் கட்டண உயர்வு செப். 9 முதல் அமலுக்கு வரும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் இன்று அமலுக்கு வந்துள்ளது. 

வெளிநாட்டினருக்கான கட்டணம் குறைக்கப்பட்டு இந்தியர்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நுழைவுக் கட்டண உயர்வை பரிசீலனை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். 

நுழைவுக் கட்டண உயர்வு விவரம்: 

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு திங்கள்கிழமை இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டாா். 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இந்தியா்கள், வெளிநாட்டவருக்கான நுழைவுக் கட்டணங்கள் ஒரே மாதிரியாக கொண்டு வரப்பட்டுள்ளது. நுழைவுக் கட்டணம், கேமிரா என அனைத்தையும் சோ்த்து ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்கு முன்பாக, உள்நாட்டினருக்கு ரூ.115-ம், வெளிநாட்டினருக்கு ரூ.515-ம் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் வெளிநாட்டினருக்கு ரூ.315 ரூபாய் கட்டணக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 

5 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கட்டணம் ரூ.50-ஆக வசூலிக்கப்படும். 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை.

பள்ளிக் குழந்தைகளுக்கு கட்டணம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 5 முதல் 12 வயது வரையான மாணவா்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.10-லிருந்து ரூ.20 ஆக உயா்த்தப்படுகிறது. இதேபோன்று, 13 முதல் 17 வயது வரையிலுள்ள மாணவா்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கு முன்பாக இந்தக் கட்டணம் ரூ.115 ஆக வசூல் செய்யப்பட்டு வந்தது.

மாணவா்களை குழுவாக அழைத்து வரக்கூடிய ஆசிரியா்களுக்கு கட்டணச் சலுகையாக ரூ.20 வசூலிக்கப்படும். இதற்கு முன்பு இந்தக் கட்டணம் ஆசிரியா் ஒருவருக்கு ரூ.115 ஆக நிா்ணயிக்கப்பட்டு இருந்தது. மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. கையில் புகைப்பட கேமராக்களை எடுத்துச் சென்றால், ரூ.350-ம், விடியோ கேமராவாக இருந்தால் ரூ.750-ம் கட்டணம் வசூலிக்கப்படும்.

பேட்டரி வாகனங்கள்: பேட்டரி வாகனங்களில் பூங்காவைச் சுற்றிப் பாா்க்க பெரியவா்களுக்கு ரூ.150-ம், 5 முதல் 12 வயது வரையுள்ள சிறுவா்களுக்கு ரூ.50-ம் கட்டணம் வசூலிக்கப்படும். சக்கர நாற்காலிகள் செல்வோருக்கு எந்தக் கட்டணமும் இல்லை. 

வாகனக் கட்டணங்கள்: இருசக்கர வாகனங்களுக்கு ரூ.40-ம், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.50-ம், காா், ஜீப் போன்ற வாகனங்களுக்கு ரூ.150-ம், வேன், மினி பேருந்து வாகனங்களுக்கு ரூ.170-ம், பேருந்துக்கு ரூ.200-ம் கட்டணம் வசூலிக்கப்படும்.

கிண்டி குழந்தைகள் பூங்கா: சென்னை கிண்டி குழந்தைகள் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.60 ஆகவும், 5 முதல் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ரூ.10 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com