முதல்வர் விஜய் முன்னிலையில் 3 திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையொப்பம்!நீதித் துறையில் செய்யறிவு! வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்! கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

பொன்முடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜராக உத்தரவு

செம்மண் குவாரி முறைகேடு தொடர்பான அமைச்சர் க.பொன்முடி வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செப்.25-இல் ஆஜராக விழுப்புரம் நீதிமன்றத்தில்  உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2023, 1:05 pm IST

விழுப்புரம்: செம்மண் குவாரி முறைகேடு தொடர்பான அமைச்சர் க.பொன்முடி வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செப்.25-இல் ஆஜராக விழுப்புரம் நீதிமன்றத்தில்  உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பு சாட்சிகள் தொடர்ந்து பிறழ் சாட்சியமளித்து வந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் அனுமதிக் கோரி,  முன்னாள் அதிமுக  அமைச்சர் டி.ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் செப்.25-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, கூடுதலாக கனிமவளத்துறையையும் கவனித்து வந்தார். இந்த ஆட்சிக்காலத்தில் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அமைச்சர் க.பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி எம்.பியுமான பொன்.கெளதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த 2012-ஆம்  ஆண்டில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின் போது லோகநாதன் இறந்து விட்டார்.
 
இந்த வழக்கில்  அரசுத் தரப்பு சாட்சிகளாக மொத்தம் 67 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை வரை (செப்.7) வரை மொத்தம் 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் 9 பேர் அரசுத் தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியமளித்துள்ளனர்.

ஓய்வு பெற்ற வானூர் வட்டாட்சியர் குமாரபாலன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரன்,  கிராம உதவியாளர்கள் பூத்துறை ரமேஷ், கோபாலகண்ணன், நில அளவைத்துறை முன்னாள் துணை ஆய்வாளர் நாராயணன், கனிமவளத்துறை முன்னாள் துணை இயக்குநர் சுந்தரம், ஓய்வுபெற்ற வட்டாட்சியர் மாணிக்கம், ஓய்வுபெற்ற நில அளவையர் அண்ணாமலை, எம்.பி. பொன். கௌதமசிகாமணிக்கு நிலத்தை குத்தகைக்கு தந்த புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பாஸ்கர் ஆகிய 9 பேர் அரசுத் தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியமளித்தனர். புவியியல் மற்றும் சுரங்கத்துறை முன்னாள் துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, கனிமவளத்துறை முன்னாள் துணை இயக்குநர் கண்ணன் மட்டும் தங்கள் சாட்சியத்தை பதிவு செய்தனர்.

முன்னாள் அமைச்சர் மனுதாக்கல்: 

இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டவர்கள் தொடர்ந்து பிறழ் சாட்சியமாக மாறி வருவதால், வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் அனுமதிக் கோரி முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயக்குமார் சார்பில் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் அரசு வழக்குரைஞர் சீனிவாசன் இந்த மனுவை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை  அளித்தார்.

அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்குப் பதிவு செய்யப்படும்போது பொன்முடி ஆட்சியிலும், அதிகாரத்திலும் இல்லாத நிலையில் முறையாக விசாரணை நடைபெற்று, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் உண்மை நிலவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் 2021-இல் திமுக ஆட்சியில் அமைச்சர் பொன்முடி இடம் பெற்ற பிறகு, இந்த வழக்கு விசாரணை வேகம்பெற்றதோடு, அரசுத் தரப்பு சாட்சிகள் தொடர்ந்து பிறழ் சாட்சியமளித்து வருகின்றனர். அரசு அதிகாரத்தில் இருப்பவருக்கு எதிராக அலுவலர்கள் எப்படி சாட்சியமளிக்க முடியும். நேர்மையான முறையில் அவர்கள் சாட்சியமளிக்க முடியாது. 

எனவே நீதிமன்றம் இதை கருத்தில் கொண்டு முறையாக விசாரணை நடத்த வேண்டும். மேலும் அரசுத் தரப்புக்கு உதவியாக விசாரணை நடத்த எங்களுக்கும் அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் ஜெயக்குமார் தரப்பில் தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அப்போது மனுவை ஏற்றுக் கொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா, செப்.25-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.