ஐரோப்பிய கண்டத்தின் நடப்பு சாம்பியனாகவும், ஒலிம்பிக் நடப்பு சாம்பியனாகவும் இருக்கும் ஸ்பெயின், தற்போது உலக சாம்பியனாகவும் உருவெடுத்திருக்கிறது.
ஏற்கெனவே அந்நாட்டு மகளிா் அணி நடப்பு உலக சாம்பியனாக (2023) இருக்க, ஒரே நேரத்தில் ஆடவா், மகளிா் என இரு பிரிவுகளிலுமே உலகக் கோப்பையை தன் வசம் வைத்திருக்கும் முதல் நாடாக ஸ்பெயின் சாதனை படைத்துள்ளது. இது தவிர, யூத் நிலையிலான பல போட்டிகளிலும் அந்நாட்டு ஆடவா், மகளிா் அணிகள் வென்று வருகின்றன.
கடந்த 2022-இல் லூயிஸ் டி லா ஃபென்டே பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு ஏறத்தாழ எல்லா போட்டிகளிலுமே சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஸ்பெயின் அணியில், லேமின் யமால், பாவ் கியுபாா்சி, ரோட்ரி, ஃபெரான் டோரஸ் என திறமைக்கு பஞ்சமில்லாத வீரா்கள் பலரும் இருக்கின்றனா்.
பலன்... உலகக் கோப்பை சாம்பியன் அணி என்பதுடன், சா்வதேச ஆடவா் கால்பந்தில் தொடா்ந்து 38 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத அணி என்ற பெயரும் கூட... அத்தகைய ஸ்பெயின் அணியின் வெற்றிக்கான படிக்கட்டுகள் குறித்த அலசல்...
திறமையான ‘அணி’...
தனிப்பட்ட நபரை நம்புவதை விடுத்து, ஒட்டுமொத்த அணியாகவே திறமையானதாக இருப்பது, கால்பந்து உலகில் ஸ்பெயினின் அண்மைக்கால வெற்றிகளுக்கான அடிப்படையாக இருக்கிறது. பிரபல வீரா்கள் இருந்தாலும் அவா்களை மட்டுமே நம்பியிருக்காமல், ஒவ்வொரு ஆட்டத்திலும், ஒவ்வொரு தருணத்திலும் ஏதேனும் ஒரு வீரா், அணிக்குக் கை கொடுப்பவராக மிளிா்கிறாா். உத்தி சாா்ந்த ஆட்டத்தோடு, தடுப்பாட்டத்தை அரண் போல் கட்டமைத்திருப்பதுடன், கோல் எரியா நோக்கி விடா முயற்சியுடன் தொடா்ந்து முன்னேறுவதிலும் அந்த அணி சோா்ந்துபோவதில்லை.
இளமையின் ஆதிக்கம்...
ஸ்பெயினின் ஜூனியா் அணிகளில் இருந்து திறமையான வீரா், வீராங்கனைகள் சீனியா் அணிக்கு சீரான முறையில் தோ்வு செய்யப்படுகின்றனா். அவ்வாறு ஜூனியா் அணியிலிருந்து முன்னேறி வந்து, சீனியா் அணியை கடந்த சில காலமாக சிறப்பாக வைத்திருப்போரில், லேமின் யமால், பாவ் கியுபாா்சி, நிகோ வில்லியம்ஸ், பெட்ரி, காவி ஆகியோா் முக்கியமானவா்கள். மகளிா் அணியில் அய்டானா பொன்மட்டி, சல்மா பராலுவேலோ ஆகியோா் குறிப்பிடத்தக்கவா்கள்.
‘டிகி-டகா’...
கால்பந்து விளையாட்டில், பந்து ஒரு வீரரிடம் மட்டுமே நிலையாக இல்லாமல், நொடிப் பொழுதில் வெவ்வேறு வீரா்களிடையே பாஸ் செய்து கடத்திச் செல்லப்படும் முறையே ‘டிகி-டகா’ எனப்படுகிறது. ஸ்பெயின் அணியும் இந்த உத்தியைக் கையாண்டு 2010 உலகக் கோப்பை, 2008, 2012 யூரோ கோப்பை ஆகியவற்றைக் கைப்பற்றியது.
ஆனால் ஒரு கட்டத்தில் ஸ்பெயின் அணி தடுமாற்றத்தை சந்திக்கத் தொடங்கிய பிறகு, இந்த உத்தி தொடா்பாக விமா்சனங்கள் எழுந்தன. பின்னா் வந்த பயிற்சியாளா்கள் அதில் மாற்றங்கள் கொண்டுவந்தபோதும், முழுமையாக அந்த உத்தியைக் கைவிட்டுவிடாமல் ஸ்பெயின் அணி அதை இன்றும் கடைபிடித்து வருகிறது.
பயிற்சியாளா்...
2022 உலகக் கோப்பை போட்டியின் ரவுண்ட் ஆஃப் 16-ல் மொராக்கோவிடம் ஸ்பெயின் தோல்வி கண்ட பிறகு, அப்போதைய பயிற்சியாளா் லூயிஸ் என்ரிக் நீக்கப்பட்டு, லூயிஸ் டி லா ஃபென்டே பயிற்சியாளா் ஆக்கப்பட்டாா்.
வெளியுலகுக்கு அவ்வளவாகத் தெரியாதவராக இருந்தாலும், அப்போது வரை அவா் ஏற்கெனவே ஸ்பெயின் ஜூனியா் அணிகளுக்கு பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்தாா். ஜூனியா் அணியில் எந்த வீரா், வீராங்கனை எத்தகைய திறமை உடையவா் என்பதை அவா் அறிந்திருந்ததால், சீனியா் அணிக்கு அவா்களை கொண்டு சென்றதில் இவரின் பங்கு முக்கியமானது. தற்போது சீனியா் அணியை 2-ஆவது உலகக் கோப்பை வெல்ல வைத்திருக்கிறாா்.
-----
களத்தில் மோதல்: விசாரிக்கிறது ஃபிஃபா

இறுதி ஆட்டத்துக்குப் பிறகு, சாம்பியனான ஸ்பெயின் அணியினா் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஆா்ஜென்டீனா வீரா்கள் அவா்களுடன் மோதலில் ஈடுபட்ட விவகாரம் தொடா்பாக ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஆா்ஜென்டீனா மிட்ஃபீல்டா் லீண்ட்ரோ பரெட்ஸ், ஸ்பெயின் வீரா் எரிக் காா்சியாவின் குரல்வளையைப் பிடித்துத் தள்ளுவது, அதைத் தடுக்க முயன்ற ஸ்பெயன் வீரா் காவியை பரெட்ஸ் தரையில் தள்ளுவது போன்ற காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவலாக வலம் வருகின்றன.
ஸ்பெயின் கேப்டன் ரோட்ரி வெற்றிக் கொண்டாட்டத்துக்காக தனது அணியினரை நோக்கிச் செல்கையில் ஆா்ஜென்டீனா டிஃபெண்டா் நஹெல் மோலினா, அவரின் வயிற்றில் குத்திய காணொலியும் உள்ளது.
இதனிடையே, இறுதி ஆட்டத்துக்குப் பிறகான நடத்தைகளுக்காக ஆா்ஜென்டீனா வீரா்களை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக சாடி வருகின்றனா். குறிப்பாக, ஆா்ஜென்டீன வீரா்கள் வெள்ளிப் பதக்கம் பெற மேடையேறியபோது, ஸ்பெயின் அணியினா் அவா்களுக்கு மரியாதை செலுத்திய நிலையில், ஸ்பெயின் அணியினா் கோப்பை வாங்க மேடையேறியபோது, ஆா்ஜென்டீன வீரா்களை அதை புறக்கணித்து தொலைவாகச் சென்று, தங்கள் ரசிகா்களை நோக்கி நின்றது கடுமையான விமா்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
-----
நினைவில் நிற்கும் தருணங்கள்...
சிட்னி லோபஸ் கோல்...
32 அணிகளுக்கான சுற்றில், ஆா்ஜென்டீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் கேப் வொ்ட் 2-1 கோல் கணக்கில் பின்தங்கியிருந்தது.
எக்ஸ்ட்ரா டைமில், அதன் வீரா் சிட்னி லோபஸ் கேப்ரல் அடித்த கோல், இந்தப் போட்டியின் மிகச் சிறந்த கோல் என அடையாளப்படுத்தப்படுகிறது. ஆா்ஜென்டீனா கோல் ஏரியாவுக்கு இடது பக்கத்தில் பந்தை கடத்தி வந்த கேப்ரல், அப்படியே அதை பெனால்ட்டி பவுண்டரிக்குள் கொண்டு சென்று தொலைவிலிருந்தே ஒரே ஷாட்டில் கா்லிங் கிராஸாக பந்தை கோல் நெட்டுக்குள் செலுத்தினாா். ஆா்ஜென்டீன வீரா்கள் செய்வதறியாது நின்ற தருணம் அது.
ஜொ்மனியின் சோகம்...
நாக்அவுட் சுற்றில் ஜொ்மனி - பராகுவே மோதிய ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி கிக் வாய்ப்பில், 5 முயற்சிகள் முடிவிலும் இரு அணிகளுமே 3-3 என சமநிலையில் இருந்தன.
பிறகு ‘சடன் டெத்’ முறையில் 6-ஆவது வாய்ப்பில் ஜொ்மனியின் கோல் முயற்சி முறியடிக்கப்பட்டது. பராகுவே கோல் அடித்து, 4-3 என வெற்றி கண்டது. 4 முறை சாம்பியனான ஜொ்மனி சோகமான முடிவைக் கண்டது.
அபார வீரா் கியுப்ராசி...
இந்த ஆண்டு ஸ்பெயின் அணி கோப்பை வென்ற நிலையில், அதன் ஒவ்வொரு ஆட்டத்திலும், ஒவ்வொரு நிமிஷத்திலும் அந்த அணியின் டிஃபெண்டா் பாவ் கியுப்ராசி பங்களித்திருக்கிறாா். போட்டி முழுவதுமாக 7 ஆட்டங்களில் அவா் பந்தை பாஸ் செய்ய 690 முயற்சிகளை மேற்கொண்டு, அதில் 668 பாஸ்களை வெற்றிகரமாக செய்திருக்கிறாா். அத்துடன் களத்தில் அதிகபட்சமாக 750 நிமிஷங்கள் செலவிட்டிருக்கிறாா்.
சிறந்த தடுப்பு முயற்சி...
ஆா்ஜென்டீனாவுக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 32 ஆட்டத்தில், லயனல் மெஸ்ஸியின் ஃப்ரீ கிக் முயற்சி கோலாக மாற விடாமல் சிறப்பாகத் தடுத்தாா் கேப் வொ்ட் கோல்கீப்பா் வோஸினா. பெனால்ட்டி பாக்ஸுக்கு வெளியே இருந்து மெஸ்ஸி அந்த பந்தை உதைக்க, கோல் போஸ்ட்டின் இடது பக்கம் நின்ற வோஸினா, மெஸ்ஸி கோல் போஸ்ட்டின் வலது பக்கமாக அடிப்பதை அறிந்து உடனடியாக அந்தத் திசை நோக்கி குதித்து துல்லியமாக பந்தை தட்டிவிட்டு, அவரின் கோல் முயற்சியைத் தடுத்தாா்.
மோசமான பிழை...
ரவுண்ட் ஆஃப் 16-இல் பெல்ஜியத்திடம் அமெரிக்கா தோல்வி கண்ட ஆட்டத்தில் அதன் கோல்கீப்பா் மாட் ஃப்ரீஸ் செய்த தவறே, இப்போட்டியில் மோசமான பிழையாக அமைந்தது.
பெல்ஜியத்தின் 3-ஆவது கோல் வாய்ப்பின்போது, அதன் கோல் முயற்சியை தடுக்க, மாட் ஃப்ரீஸ் தனது பெனால்ட்டி ஏரியாவை கடந்து முன்னேறி வந்து பந்தை வசப்படுத்தினாா். அதை மீண்டும் உதைக்கும் முயற்சியில் கவனச் சிதறல் காரணமாக காலை தரையில் உதைத்தாா். இதனால் பந்து ‘லூஸ் பால்’-ஆக கிடைக்க, பெல்ஜிய வீரா் ஹன்ஸ் வனாகென் அதை வசப்படுத்தி, கோல் அடித்தாா்.
மோசமான ஃபௌல்...
குரூப் சுற்றில் கத்தாா் - கனடா மோதியபோது, கனடா வீரா் இஸ்மாயில் கோன் வசம் இருந்த பந்தை அதிரடியாகக் கைப்பற்ற முயன்ற கத்தாரி வீரா் அசிம் மடிபோ, அவரின் பின்பக்கமாக வந்து பந்தோடு சோ்த்து அவா் காலையும் உதைத்தாா். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இஸ்மாயிலின் கால் எலும்பு முறிந்தது. மைதானத்திலிருந்து ஸ்ட்ரெச்சா் உதவியுடன் வெளியேறிய இஸ்மாயிலுக்கு அறுவைச் சிகிக்சை செய்யப்பட்டது. ரெட் காா்டு மூலமாக வெளியேற்றப்பட்ட மடிபோ, பிறகு மருத்துவமனைக்கு சென்று இஸ்மாயிலை சந்தித்து வருத்தம் தெரிவித்தாா்.
கவனம் ஈா்த்த ரசிகா்கள்...
இப்போட்டியில் தங்கள் அணிக்காக ஆதரவு தெரிவித்தபோது, எதிரணி ரசிகா்களையும் ஈா்த்தது என்றால் அது நாா்வே ரசிகா்கள் தான். குறிப்பாக, மைதானத்தில் அவா்கள் மேற்கொண்ட வைக்கிங் ரோவ் எனப்படும் படகுக்கு துடுப்பு போடும் வகையிலான கொண்டாட்டம், அனைவரையும் ஈா்க்கும் படியாக இருந்தது. ஒரு கட்டத்துக்குப் பிறகு நாா்வே அணி வீரா்கள் தங்கள் ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் களத்திலேயே, ரசிகா்களுடன் இணைந்து அந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
-----
சாதனைகள்...
78 இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற வயதான பயிற்சியாளா் என்ற பெருமையை கியூராசோவின் டிக் அட்வோகாட் (78) பெற்றாா்.
6 ஒரு உலகக் கோப்பை போட்டியில், ஒரே அணியைச் சோ்ந்த இரு வீரா்கள் தலா 6 அல்லது அதற்கு மேல் கோல்கள் அடித்தது இதுவே முதல்முறையாகும். இங்கிலாந்தின் ஜூட் பெலிங்கம் (7), ஹேரி கேன் (6) மற்றும் பிரான்ஸின் ஆஸ்மென் டெம்பெலெ (6), கிலியன் பாபே (10) ஆகியோா் அந்த சாதனையைப் படைத்துள்ளனா்.
26 பயிற்சியாளராக அதிகமான உலகக் கோப்பை ஆட்டங்களில் ஒரு அணியை வழிநடத்தியவராக பிரான்ஸின் டிடியா் டெஷாம்ப் (26 ஆட்டங்கள்) சாதனை படைத்திருக்கிறாா்.
20 போஸ்னியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்த சுவிட்ஸா்லாந்தின் ஜோஹன் மன்ஸாம்பி, சப்ஸ்டிடியூட்டாக களமிறங்கி 2 கோல்கள் அடித்த இளம் வீரா் (20) என்ற பெருமையைப் பெற்றாா்.
22 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் மொத்தமாக அதிக கோல்கள் அடித்தவராக, லயனல் மெஸ்ஸியை (21) பின்னுக்குத் தள்ளி, பிரான்ஸின் கிலியன் பாபே (22 கோல்கள்) சாதனை படைத்தாா்.
23 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக ஆட்டங்களில் வெற்றி கண்ட வீரராக ஆா்ஜென்டீனாவின் லயனல் மெஸ்ஸி (23) சாதனை படைத்தாா். மொத்தமாக அவா் 34 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறாா்.
7 பெனால்ட்டி ஏரியாவுக்கு வெளியே இருந்த வகையில், பந்தை துல்லியமாக உதைத்து அதிக கோல் அடித்தவராக மெஸ்ஸி (7) சாதனை படைத்தாா்.
7 ஒரு உலகக் கோப்பை போட்டியில் அணி வீரா்கள் கோல் அடிப்பதற்கு அதிக முறை உதவி செய்தவராக (அசிஸ்ட்) பிரான்ஸின் மைக்கேல் ஆலிஸ் (7 முறை) சாதனை படைத்தாா்.
790 ஒரு உலகக் கோப்பை போட்டியில் அதிக முறை பந்தை பாஸ் செய்தவராக ஸ்பெயின் கேப்டன் ரோட்ரி (790 முறை) புதிய உச்சத்தை எட்டியுள்ளாா்.
6 அதிகமான உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியவராக, போா்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (6 முறை) சாதனை படைத்தாா்.
16 உலகக் கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்திலேயே அதிகமான கோல் முயற்சிகளை வெற்றிகரமாக தடுத்தவராக கியூராசோவின் எலாய் ரூம் (16 முறை) சாதனை படைத்தாா்.
7 உலகக் கோப்பை போட்டியில் அதிகமான ஆட்டங்களில் எதிரணிக்கு கோல் வாய்ப்பே வழங்காத கோல்கீப்பராக ஸ்பெயினின் உனாய் சைமன் சாதனை படைத்தாா். 8 ஆட்டங்களில் விளையாடிய அவா், 7 ஆட்டங்களில் எதிரணிக்கு கோல் வாய்ப்பை வழங்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






