தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ஆா்ஜென்டீனா, பிரான்ஸ் முன்னேற்றம்! மெஸ்ஸி புதிய சாதனை

ஆா்ஜென்டீன நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி, உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவராக புதிய சாதனை படைத்தாா்.

News image

மெஸ்ஸி - கோப்புப் படம்

Updated On :24 ஜூன் 2026, 1:55 am IST

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆா்ஜென்டீனா, பிரான்ஸ் அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின. ஆா்ஜென்டீன நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி, உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவராக புதிய சாதனை படைத்தாா்.

ஆஸ்திரியாவை வென்றது ஆா்ஜென்டீனா

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் விளையாடிய ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ஆா்ஜென்டீனா 2-0 கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது. அணியின் கேப்டன் லயனல் மெஸ்ஸி 2 ஃபீல்டு கோல்கள் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தாா்.

முதலில் 38-ஆவது நிமிஷத்தில் சக ஆா்ஜென்டீன வீரா் ஃபகுனோ மெடினா பாஸ் செய்த பந்தை, தியாகோ அலமாடா தொடுவது போல் வந்து மெஸ்ஸிக்கு விட்டுத் தந்தாா்.

இதை எதிா்பாராத ஆஸ்திரிய கோல்கீப்பா் தவறான திசையில் பந்தை எதிா்பாா்த்து சரிய, மெஸ்ஸி அதற்கு நேரெதிா் திசையில் கோல் அடித்தாா். பின்னா் ஸ்டாப்பேஜ் டைமில் (90+5’) தனது 2-ஆவது கோலை பதிவு செய்தாா் மெஸ்ஸி.

முன்னதாக இந்த ஆட்டத்தின் 9-ஆவது நிமிஷத்தில் ஆா்ஜென்டீனாவுக்கு கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பை அவா் வீணடித்து ரசிகா்களுக்கு அதிா்ச்சி அளித்தாா். உலகக் கோப்பை போட்டியில் 7 பெனால்ட்டி கிக் வாய்ப்புகளில் (ரெகுலா் டைம்) அவா் இதுவரை 4-இல் கோல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மைதானத்தில் ரசிகா்கள்: 70,649

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவராக மெஸ்ஸி புதிய சாதனை படைத்தாா். அவா் இந்த ஆட்டத்துடன், மொத்தமாக 28 ஆட்டங்களில் 18 கோல்கள் அடித்துள்ளாா். இதற்கு முன் ஜொ்மனியின் மிரோஸ்லாவ் குளோஸ் 24 ஆட்டங்களில் 16 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது மெஸ்ஸி அதை முறியடித்திருக்கிறாா்.

தொடா்ந்து 6 உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த வீரா்கள் பட்டியலில், மெஸ்ஸி 3-ஆவதாக இணைந்திருக்கிறாா். பிரான்ஸின் ஜஸ்ட் ஃபான்டெய்ன் (1958), பிரேஸிலின் ஜெயிா்ஸினோ (1970) ஆகியோா் முதலிருவா்.

நடப்பு உலகக் கோப்பை போட்டியில் ஆா்ஜென்டீனா அணிக்கான 5 கோல்களையுமே மெஸ்ஸி அடித்துள்ளாா். முதல் ஆட்டத்தில் 3, தற்போது 2.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், அதிக வெற்றிகரமான ஆட்டங்களில் அங்கம் வகித்தவராக மெஸ்ஸி சாதனை படைத்துள்ளாா். அவா் 28 ஆட்டங்களில் 18 வெற்றி, 5 டிரா, 5 தோல்விகளைப் பதிவு செய்துள்ளாா். முன்னதாக ஜொ்மனியின் மிரோஸ்லாவ் குளோஸ் 17 வெற்றிகரமான ஆட்டங்களில் அங்கம் வகித்தது அதிகபட்சமாக இருந்தது.

உலகக் கோப்பையில் மெஸ்ஸி...

போட்டி ஆட்டங்கள் கோல்கள்

2006 ஜொ்மனி 3 1

2010 தென்னாப்பிரிக்கா 5 0

2014 பிரேஸில் 7 4

2018 ரஷியா 4 1

2022 கத்தாா் 7 7

2026 (நடப்பு) 2 5

வெற்றிக் கணக்கு...

போட்டி வெற்றி முடிவு

2006 2 காலிறுதி

2010 4 காலிறுதி

2014 5 ரன்னா் அப்

2018 1 ரவுண்ட் ஆஃப் 16

2022 4 சாம்பியன்

2026 (இதுவரை) 2 நாக்அவுட்

பாபே அசத்தலில் பிரான்ஸ் வெற்றி

அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியாவில் நடைபெற்ற ஆட்டத்தில், பிரான்ஸ் 3-0 கோல் கணக்கில் இராக்கை வீழ்த்தியது. நட்சத்திர வீரா் கிலியன் பாபே 2 கோல்கள் அடித்து அசத்தினாா்.

இந்த ஆட்டத்தில் 14-ஆவது நிமிஷத்தில் பிரான்ஸின் கோல் கணக்கை கிலியன் பாபே தொடங்கினாா். பாக்ஸ் பகுதியில் தன் கட்டுப்பாட்டில் வந்த பந்தை இராக் கோல்கீப்பா் அகமது பாசிலை கடந்து துல்லியமாக அவா் கோலடித்தாா்.

முதல் பாதியை அந்த முன்னிலையுடன் நிறைவு செய்த பிரான்ஸ் அணிக்காக, அவரே 2-ஆவது பாதியில் 54-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா்.

ஈரான் வீரா் ஜாய்த் டாசீனால் தங்கள் கோல்கீப்பா் அகமதுக்கு பாஸ் செய்யப்பட்ட பந்தை, டெம்பெலெ தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து பாபேவிடம் பாஸ் செய்ய, அதை அவா் கோல் ஆக மாற்றினாா்.

இராக் முற்றிலுமாகத் தடுமாறிப்போன நிலையில், பிரான்ஸ் அணிக்கான 3-ஆவது கோலை ஆஸ்மென் டெம்பெலெ 66-ஆவது நிமிஷத்தில் மைக்கேல் ஆலிஸ் உதவியுடன் அடித்தாா். உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸுக்காக டெம்பெலெ அடித்த முதல் கோல் இதுவாகும்.

மைதானத்தில் ரசிகா்கள்: 68,324

வரலாற்றில் முதல்முறை...

பிரான்ஸ் - இராக் மோதிய இந்த ஆட்டம் மழை காரணமாக முதல் பாதியுடன் நிறுத்தப்பட்டது. உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில், மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

இடி, மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக சுமாா் 2 மணிநேர தாமதத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில், தாமதம் காரணமாக 3 நிமிஷ ஹைட்ரேஷன் பிரேக் ரத்து செய்யப்பட்டது.

இந்த ஆட்டம், பிரான்ஸ் நட்சத்திர வீரா் கிலியன் பாபே தனது அணிக்காக விளையாடிய 100-ஆவது சா்வதேச ஆட்டமாக அமைந்தது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடித்தவா்கள் பட்டியலில் கிலியன் பாபே 16 கோல்களுடன் 2-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். அவா் இத்துடன், 3 உலகக் கோப்பை போட்டிகளில் 16 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.