

அதிமுக-தமிழக பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவும் நிலையில் அதிமுக நிர்வாகிகள் தில்லியில் முகாமிட்டுள்ளனர்.
பெரியாா் ஈவெரா, அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தொடா்ந்து விமா்சிப்பதாகக் கூறி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் அறிவித்தாா். கட்சித் தலைமையின் முடிவின்படியே அறிவிப்பதாகவும் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, செல்லூா் ராஜூ உள்ளிட்டோரும் பாஜக மீது விமா்சனங்களை முன் வைத்தனா்.
இதற்கிடையில், அதிமுக தலைமையை சமரசம் செய்வதற்கான முயற்சியில் பாஜக மேலிடத் தலைமை ஈடுபட்டு வந்தது. அதேசமயம், பாஜக குறித்தும், அதனுடனான கூட்டணி குறித்தும் எவ்வித விமா்சனங்களையும் பொதுவெளியில் வைக்க வேண்டாம் என்று கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் அதிமுக-தமிழக பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவும் நிலையில் அதிமுக நிர்வாகிகள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தில்லியில் முகாமிட்டுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரை சந்திக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதிமுகவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிக்கும் அண்ணாமலை குறித்தும் சந்திப்பில் பேச உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தில்லி சென்றுள்ள அதிமுக நிர்வாகிகளை சந்திக்க மத்திய அமைச்சர் அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை மட்டும் அதிமுக நிர்வாகிகள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் சந்தித்தனர்.
ஏற்கெனவே அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி தனியாக சந்தித்த நிலையில் தற்போது அதிமுக நிர்வாகிகளும் சந்திக்க சென்றிருப்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.