ஈரோட்டில் ரன்னர்ஸ் கிளப் சார்பில் அக்.15 இல் மாரத்தான் போட்டி

ஈரோட்டில் ரன்னர்ஸ் கிளப் சார்பில் இரண்டாவது முறையாக வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.
ஈரோடு ரன்னர்ஸ் கிளப் சார்பில் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி நடக்கும் மாரத்தான் போட்டிக்கான டி-சர்ட், பதக்கங்கள் அறிமுக விழா நடைபெற்றது.
ஈரோடு ரன்னர்ஸ் கிளப் சார்பில் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி நடக்கும் மாரத்தான் போட்டிக்கான டி-சர்ட், பதக்கங்கள் அறிமுக விழா நடைபெற்றது.

ஈரோடு: ஈரோட்டில் ரன்னர்ஸ் கிளப் சார்பில் இரண்டாவது முறையாக வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்பவர்கள் வருகிற 30 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில ரன்னர்ஸ் கிளப் சார்பில் வருகிற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி மாரத்தான் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி, மாரத்தான் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு வழங்க டி-சர்ட் மற்றும் வெற்றி பெறுபவர்களுக்கான பதக்கங்கள் அறிமுக விழா நடைபெற்றது. 

இந்த விழாவிற்கு ஈரோடு ரன்னர் கிளப்பின் செயலாளர் பிரசன்னா தலைமை தாங்கினார். தலைவர் அருநந்தி செல்வன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஒளிரும் ஈரோடு தலைவர் சின்னச்சாமி, பொதுசெயலாளர் கணேசன், ஈரோடு இந்து கல்வி நிலையத்தின் பொருளாளர் அருண்குமார் பாலசாமி, விவி நேஷனல் செந்தில்நாதன், கிரின் பில்டு சதாசிவம், சிறகுகள் அமைப்பு விமல் கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, ஈரோட்டில் நடைபெறும் மாரத்தான்-2023 போட்டிக்கான டி-சர்ட் மற்றும் பதக்கங்களை அறிமுகப்படுத்தினர். விழாவினை ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் மகாலட்சுமி, பிரபு, இசை ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

இதுகுறித்து ஈரோடு ரன்னர்ஸ் கிளப் நிர்வாகிகள் கூறியதாவது:
ஈரோடு ரன்னர்ஸ் கிளப் கடந்த 2016 ஆம் ஆண்டு சிறிய குழுவாக தொடங்கப்பட்டது. தற்போது, 200-க்கும் மேற்பட்ட மாரத்தான் ரன்னர்களுடன் வளர்ந்துள்ளது. 1,000க்கும் மேற்பட்டவர்களை மாரத்தான் ரன்னராக உருவாக்கியுள்ளோம். மாரத்தான் என்பது 42.195 கி.மீட்டர், அரை மாரத்தான் என்பது 21.1கி.மீட்டர், அல்ட்ரா மாரத்தான் என்பது காடு மலை பிரதேசங்களில் நடைபெறும் 16, 30, 32, 64, 72, 90, 100 கி.மீட்டர் என நீண்ட தூர ஓட்டம் ஆகும். ஈரோடு ரன்னர்ஸ் கிளப் உறுப்பினர்கள் கடந்த ஒரு ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் நடந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இதில், கடந்த 10 ஆம் தேதி உலகின் மிக உயரமான இடமான லடாக்கில் நடந்த மராத்தான் போட்டியில் ஈரோடு ரன்னர்ஸ் கிளப் உறுப்பினர்கள் 9 பேர் கலந்து கொண்டு 21.1 கி.மீட்டர் மற்றும் 42.195 கி.மீட்டர் ஓடி நிறைவு செய்துள்ளனர். 

ஈரோடு ரன்னர்ஸ் கிளப் சார்பில்  இரண்டாவது முறையாக ஈரோடு மாரத்தான்-2023 வருகிற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. போட்டியானது ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்க உள்ளது. மாரத்தான் போட்டியானது 5 கி.மீட்டர் மஜா ரன் 8 வயதிற்கு மேற்பட்டவர்களும், 5 கி.மீட்டர்(டைமிடு) 12 வயதிற்கு மேற்பட்டவர்களும், 10 கி.மீட்டர் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 21.1கி.மீட்டர் அரை மாரத்தான் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நடக்கிறது. 

இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பங்கேற்கலாம். இந்த மாரத்தானின் நோக்கமே அனைவரும் போதை பொருள் பழக்கத்திற்கு ஆளாகாமல் இருப்பதும், அதில் இருந்து மீள்வதும் மற்றும் ஈரோடு மாநகரை தூய்மையாக வைத்திருப்பதுமே ஆகும்.

ஈரோடு மாரத்தான் போட்டியில் பங்கேற்க www.erodemarathon.com என்ற இணையதளத்தில் ஆன்லைனில் வருகிற 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என்று அவர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com