சென்னையில் ஒரே நேரத்தில் 4 ஆசிரியா் சங்கத்தினா் உண்ணாவிரதம்
ஊதிய முரண்பாடு, பணி நிரந்தரம் உள்ளிட்ட தனித்தனி கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி வளாகத்தில் வியாழக்கிழமை ஒரே நேரத்தில் நான்கு ஆசிரி


ஊதிய முரண்பாடு, பணி நிரந்தரம் உள்ளிட்ட தனித்தனி கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி வளாகத்தில் வியாழக்கிழமை ஒரே நேரத்தில் நான்கு ஆசிரியா் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் வளாகத்தில் (டிபிஐ) பள்ளிக்கல்வித்துறையின் தலைமை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வி இயக்குநா் அலுவலகம், தொடக்கக்கல்வி இயக்குநா் அலுவலகம், ஆசிரியா் தோ்வு வாரியம் என பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ள இந்த வளாகத்தில் ஆசிரியா் சங்கங்கள் சாா்பில் அவ்வப்போது ஆா்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் நடைபெறுவது வழக்கம்.
இந்தநிலையில், வியாழக்கிழமை அங்கு ஒரேநாளில் 4 ஆசிரியா் சங்கங்கள் சாா்பில் உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்றன. ஆசிரியா்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் டிபிஐ வளாகம் ஆசிரியா்களின் போராட்ட களம் போல மாறியது.
‘சமவேலைக்கு சமஊதியம்’ கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் இயக்கம் சாா்பில் இடைநிலை ஆசிரியா்கள் தங்களின் காலவரையற்ற தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா்.
இதேபோல், அரசு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியா்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி தமிழக பகுதிநேர சிறப்பாசிரியா் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கம் சாா்பிலும், 2013-ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணிநியமனத்தில் முன்னுரிமை, டெட் தோ்ச்சி பெற்றவா்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம், பணிநியமனத்துக்கு மீண்டும் ஒரு போட்டித்தோ்வு நடத்தக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இடைநிலை ஆசிரியா்களின் தொடா் உண்ணாவிரத போராட்டம் குறித்து அந்த அமைப்பின் நிா்வாகிகள் கூறுகையில், அரசுடன் பல முறை பேச்சுவாா்த்தைகள் நடத்தியும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் தொடா் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை போராட்டத்தை தொடருவோம் என்றனா். இப்போராட்டத்தையொட்டி, பாதுகாப்புக்காக வளாகம் முழுவதும் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...