அதிமுக-பாஜக கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணமா?

2026 பேரவைத் தேர்தலில் அண்ணாமலையை முதல்வராக்க வேண்டும் என வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சரும், பவான் தொகுதி பேரவை உறுப்பினருமான கே.சி. கருப்பணன் தெரிவித்தார். 
அதிமுக-பாஜக கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணமா?

ஈரோடு: முதல்வர் வேட்பாளர் விவகாரமே அதிக-பாஜக கூட்டணி முறிவுக்கு காரணம் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியின் பண்ருட்டி ராமச்சந்திரன் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்த நிலையில், 2026 பேரவைத் தேர்தலில் அண்ணாமலையை முதல்வராக்க வேண்டும் என வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சரும், பவானி தொகுதி பேரவை உறுப்பினருமான கே.சி. கருப்பணன் தெரிவித்தார். 

கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணி நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டு, பாஜக உடனான கூட்டணி முறிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கி விட்டது. பாஜகவுடன் கூட்டணி இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து இன்று முதல் அதிமுக விலகுகிறது. இபிஎஸ் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், சில சில தினங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் அணியின் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முதல்வர் வேட்பாளர் விவகாரமே அதிக-பாஜக கூட்டணி முறிவுக்கு காரணம் என்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பவானி அருகே குருவரெட்டியூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய  முன்னாள் அமைச்சரும், பவானி தொகுதி பேரவை உறுப்பினருமான கே.சி. கருப்பணன், 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து மோடி பிரதமராக வேண்டும். 2026 பேரவைத் தேர்தலில் அண்ணாமலையை முதல்வராக்க வேண்டும் என்றால் யாராவது ஏற்றுக்கொள்வார்களா? எத்தனை வாக்குச்சாவடிகளில் அவர்களுக்கு ஆட்கள் இருப்பார்கள். ஒரு வாக்குச்சாவடியில் 5 பேர் இருக்கக்கூடிய கட்சியின் தலைவரை முதல்வராக்க வேண்டும் என்று இரண்டரை கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சியிடம் கோரிக்கை வைத்தால் அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதனால்தான் கூட்டணி முறிவு ஏற்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், கூட்டணியில் பாஜக இருக்கட்டும் என அனுசரித்து இறங்கியும் போனோம். அண்ணாமலை சின்ன பையன். என்னைவிட 20 வயது குறைவு, எடப்பாடி பழனிசாமியை விட 30 வயது குறைவு. இவர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து மோசமாக பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

வேலைக்காரனாக இருந்தாலும் முதலாளிடம் ஓரளவிற்கு தான் இறங்கி செல்ல முடியும் என்று கே.சி. கருப்பணன் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com