சங்க இலக்கிய மாத நாட்காட்டி: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழ் வளர்ச்சித்துறையின் தமிழ்ப் பரப்புரைக்கழகத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சங்க இலக்கியப் பாடல்களை அடிப்படையாகக் கொண்ட சங்க இலக்கிய மாத நாட்காட்டியினை முதல்வர் ஸ்டாலின் வெளியிட
சங்க இலக்கிய மாத நாட்காட்டி: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 46-வது சென்னை புத்தகக் காட்சி 2023 தொடக்க விழாவில், தமிழ் வளர்ச்சித்துறையின் தமிழ்ப் பரப்புரைக்கழகத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சங்க இலக்கியப் பாடல்களை அடிப்படையாகக் கொண்ட சங்க இலக்கிய மாத நாட்காட்டியினை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் பெற்றுக்கொண்டார்.
தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் வரையப்பட்ட ஓவியங்களைக் கொண்டு நாட்காட்டிகள் தயாரிக்கும் பணியைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் அறிவிப்பான ‘தீராக் காதல் திருக்குறள்’ என்ற திட்டத்தின் கீழ், திருக்குறளின் சிறப்பை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் விதமாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் திருக்குறள் குறளோவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில், 12,000 மாணவர்கள் வரைந்த ஓவியங்களில் சிறந்த 365 ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, காலவரையற்ற தினசரி நாட்காட்டியாக (Infinity Calendar) அச்சிட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இவ்வாண்டும், சங்க இலக்கியப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு சங்க இலக்கிய மாத நாட்காட்டி, தமிழ் வளர்ச்சித்துறையின் தமிழ்ப் பரப்புரைக்கழகத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழரின் கொடை, வீரம், வாழ்வியல் நெறிமுறை, காதல், அன்பு, அறிவியல், இயற்கையோடு இயைந்த வாழ்வு, வாணிகம் என்ற பொருண்மைகளின் அடிப்படையில் தமிழறிஞர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சங்க இலக்கியப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் ஓவியங்களாக வரையப்பட்டு, உரிய விளக்கவுரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் மாத நாட்காட்டியாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மு. மகேஷ் குமார், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்  துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ். வயிரவன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com