கிண்டியாரே தயாரா? சேலம் திமுகவினர் போஸ்டரால் பரபரப்பு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சேலம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒட்டியுள்ள சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிண்டியாரே தயாரா? சேலம் திமுகவினர் போஸ்டரால் பரபரப்பு!

சேலம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சேலம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒட்டியுள்ள சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறையினர் அவரை கைது செய்தனர்.

கைது நடவடிக்கையின்போது ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே செந்தில் பாலாஜியின் துறைகள் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இலாகா இல்லாதா அமைச்சராக அவர் தொடர்வார் என்று தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டு, சிறிது நேரத்திலேயே உத்தரவை நிறுத்தி வைத்தார்.

இந்த நிலையில் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சரை நீக்கியது கண்டிக்கத்தக்கது என்றும், ஆளுநருக்கு அமைச்சரவை நீக்க அதிகாரம் இல்லை எனவும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் மேலும் ஆளுநருக்கு எதிராக பல்வேறு கண்டன போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் எங்கள் அமைச்சரை நீக்க நீங்கள் யார் என்ற தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பாஜக அரசில் குற்றப் பின்னணி உள்ள 44 அமைச்சர்களை நீக்க மத்திய அரசுக்கும் குடியரசுத் தலைவருக்கும் கடிதம் எழுத கிண்டியாரே தயாரா என்று கேள்வி கேட்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதி, முள்ளுவாடி கேட், தொங்கும் பூங்கா, அஸ்தம்பட்டி புதிய பேருந்து நிலையம், ஐந்து ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சேலம் மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநரை கண்டித்து நேரடியாக திமுகவினர் ஒட்டிய சுவரொட்டிகள் அவ்வழியாக செல்வோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com