செந்தில் பாலாஜி வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

அமைச்சா் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தக் கோரி அவரது மனைவி எஸ்.மேகலா, உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனு மீது நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு வழங்கினா்.
செந்தில் பாலாஜி வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

அமைச்சா் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தக் கோரி அவரது மனைவி எஸ்.மேகலா, உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனு மீது நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு வழங்கினா்.

இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி யாா் என்பதை தலைமை நீதிபதி அறிவிப்பாா்.

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் கடந்த ஜூன் 13-ஆம் தேதி கைது செய்தனா். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூராா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தக் கோரி அவரது மனைவி எஸ்.மேகலா உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனு, நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்ரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரிக்கப்பட்டது.

கைது சட்ட விரோதமானது: இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினா். இரண்டு நீதிபதிகளும் வழக்கில் மாறுபட்ட தீா்ப்பை வழங்கினா்.

முதலில் தீா்ப்பை வாசித்த நீதிபதி நிஷா பானு, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதும், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதும் சட்டவிரோதம். அவா் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனக் கூறினாா்.

அவா் தனது தீா்ப்பில் கூறியிருப்பதாவது: சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின்படி கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரிகள், கைது செய்யப்பட்டவரை 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நீதிமன்றக் காவலில் வைக்க மட்டுமே கோர முடியும். 24 மணி நேரத்துக்குப் பிறகு அமலாக்கத் துறை எவரையும் தனது காவலில் வைத்திருக்க முடியாது.

அதனால் செந்தில் பாலாஜியை 8 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்தது சட்டவிரோதமானது. அதேவேளையில் ஆள்கொணா்வு மனுவை விசாரணைக்கு எடுத்த நேரத்தில், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிய உத்தரவு சட்டவிரோதமானது என்பதால், இந்த ஆள்கொணா்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் எனக் கூறியுள்ளாா்.

விசாரணைக்கு உகந்ததல்ல: நீதிபதி பரத சக்கரவா்த்தி தனது தீா்ப்பில், சிகிச்சை முடிந்து குணம் அடைந்த பின்னா் செந்தில் பாலாஜியை சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தாா்.

அவா் தனது தீா்ப்பில் கூறியிருப்பதாவது: செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்த பிறகு ஆள்கொணா்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன; உறவினா்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளன என்பதால் அரசியலமைப்பு வழங்கிய உரிமைகளும், குற்ற விசாரணை முறைகளும் மீறப்படவில்லை என்பது உறுதியாகிறது.

சிறப்புச் சட்டத்தில் குறிப்பிட்ட பிரிவுகள் இல்லாவிட்டால் குற்ற விசாரணை முறை சட்டம் பொருந்தும். அதன்படி, நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்கும் 41ஏ பிரிவு பொருந்தாது. சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி முழுமையாக இயந்திரத்தனமாக செயல்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தாா் என்பதை ஏற்க முடியாது.

கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கும்வரையில் செந்தில் பாலாஜியிடம் ஒரு நிமிஷம்கூட அமலாக்கத் துறை விசாரணை நடத்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கை பொருத்தவரை மின்னனு பணப் பரிவா்த்தனைகள், வெளிநாடு முதலீடுகள் உள்ளிட்டவை நடைபெறுவதால் உண்மையைக் கண்டறிவதற்கு அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிப்பது அவசியமாகிறது.

அதனால் அமலாக்கத் துறை விசாரணை நடத்த வேண்டும் என்பதை மறுக்க முடியாது. மருத்துவமனையில் உள்ள முதல் 15 நாள்களை நீதிமன்றக் காவலாக கருத முடியாது; அந்த நாள்களை கழித்துக்கொள்ள வேண்டும்.

அமைச்சா் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியில் வந்து அங்கேயே சிகிச்சை பெற்று வருகிறாா். மேலும் 10 நாள்களுக்கு அங்கேயே சிகிச்சையை தொடரலாம். ஆனால், கூடுதல் நாள்கள் சிகிச்சை தேவைப்பட்டால் சிறை மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும். அவருக்கு சிகிச்சை அளித்த காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் அங்கே சென்று சிகிச்சை வழங்கலாம்.

மருத்துவ ரீதியாக செந்தில் பாலாஜி தகுதி பெற்றுவிட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அமலாக்கத் துறை அணுகி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரலாம். அப்போது நீதிமன்றக் காவல் 15 நாள்கள் முடிந்துவிட்டது எனக் கூறி அமலாக்கத் துறை கோரிக்கையை நிராகரிக்கக் கூடாது என முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு நீதிபதி பரத சக்ரவா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.

உயா்நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீா்ப்பால் மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி யாா் என்பதை தலைமை நீதிபதி அறிவிப்பாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com