காவிரி நீரை பெற்றுத் தரக்கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 23ல் பாஜக ஆர்ப்பாட்டம்!

கர்நாடக அரசிடம் இருந்து காவிரி நீரை பெற்றுத்தர தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக சார்பில் வரும் 23-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
காவிரி நீரை பெற்றுத் தரக்கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 23ல் பாஜக ஆர்ப்பாட்டம்!

கர்நாடக அரசிடம் இருந்து காவிரி நீரை பெற்றுத்தர தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக சார்பில் வரும் 23-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் அரசு கொடுத்த நம்பிக்கை அடிப்படையில் 100 சதவீதம் பயிரிட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் டெல்டா பகுதிகளுக்கு மட்டும் 9 ஆயிரம் கனஅடி நீர் கல்லணையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்.

அவ்வாறு இருந்தால் தான் மழையில்லாதபோதும் விவசாயிகளால் பயிர்களை காப்பாற்ற முடியும். ஆனால் மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கான நீர்வரத்து 200 கனஅடி அளவிலே வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் தற்போதைய நீர் இருப்பு 36 டிஎம்சியாக உள்ளது. தினசரி 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படும் பட்சத்தில் இருப்பு நீர் குறைந்தபட்சம் 20 நாள்கள் வரையே தாக்குப்பிடிக்கும். நீர் குறைந்து விட்டால் விவசாயத்திற்கு வழங்கப்படும் நீரை நிறுத்திவிட்டு குடிநீர் தேவைக்கு மட்டுமே அணையில் இருந்து வெளியேற்றுவர்.

இந்த சூழ்நிலையில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க கூடுதல் நீர் தேவையானதாகும். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டும் தமிழகத்திற்கு காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு 48 டிஎம்சி நீரை வழங்கியிருக்க வேண்டும். அந்த நீரையும் வழங்கவில்லை, ஜூலை மாதத்திற்குரிய நீரும் வழங்கப்படவில்லை. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் தரமாட்டோம் என கூறுகிறார். மேக்கேதாட்டுவில் தடுப்பணை கட்டியே தீருவோம் என்கிறார்.

எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க கர்நாடகம் சென்றுள்ள தமிழக முதல்வரோ, காவிரி பிரச்னை குறித்து பேசுவதற்கான இடம் இது இல்லை என்கிறார். காவிரி நீரை தராமலும், மேக்கேதாட்டுவில் அணை கட்டியும், தமிழகத்தை பாலைவனமாக்க துடிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், விவசாயிகளை பாதுகாக்க வேண்டியும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முதல்வர் பெற்று தரக்கோரியும், தமிழகம் முழுவதும் வரும் 23-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அனைத்து ஊராட்சிகளிலும், மாநகராட்சி, நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

இதுவரை இல்லாத அளவில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏராளமான பாஜக தொண்டர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டமாக அமையும் என்றார். இந்த பேட்டியின்போது, கிழக்கு மாவட்ட தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com