செந்தில் பாலாஜி மேல்முறையீடு: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்ததை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரிக்கவுள்ளது.
செந்தில் பாலாஜி மேல்முறையீடு: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்ததை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரிக்கவுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கையை உறுதி செய்ததுடன், போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, மாநில போக்குவரத்துத் துறையில் நடந்த பண மோசடி வழக்கில் அமர்வு நீதிமன்றத்தால் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதும் செல்லுபடியாகும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், "கைது மற்றும் ரிமாண்ட் உத்தரவு சட்டவிரோதமானது. கைதுக்கான காரணங்களைத் தெரிவிக்காதது மனுதாரரின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைக்க காவல் துறை அதிகாரிகளாக இல்லாத அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு உரிமை உள்ளதா என்ற சட்டக் கேள்வி எழுந்துள்ளது.

மேலும், கைது செய்வதற்கான அதிகாரம் மற்றும் கட்டாயமாக விசாரிக்கும் அதிகாரம் ஆகியவை குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைக்கும் உரிமையை உள்ளடக்கியதா என்பதையும் அறிய வேண்டியுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவும் தனியாக ஒரு மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார். சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இரு வேறு தீர்ப்புகளை அளித்தது.

இதையடுத்து, இந்த விவகாரத்தை விசாரித்த மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன், ஜூலை 14-ஆம் தேதி அளித்த தீர்ப்பில், "செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் உரிமை செந்தில் பாலாஜிக்கும் உள்ளது. இதனால், அவர் மீதான விசாரணையைத் தடை செய்ய முடியாது. கைது செய்ய அதிகாரம் உள்ளபோது காவலில் எடுத்து விசாரிக்கும் அதிகாரமும் அமலாக்கத் துறைக்கு உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்தத் தடையும் கோர முடியாது. செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்ககத் துறைக்கு அதிகாரம் உள்ளது.

இந்த விவகாரத்தில் நீதிபதி பரத் சக்ரவர்த்தியின் தீர்ப்பை ஏற்பதுடன், அதில் உடன்படுகிறேன்' என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இருவரின் மனுக்களையும் ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் நாளை விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com