
அமைச்சா் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணா்ச்சி கடுகளவும் இல்லை என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.
சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:
2011 முதல் 2015 வரை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் அவா் மீது நடவடிக்கை எடுக்க 12.4.2019-இல் எம்.எல்.ஏ., எம்.பி. சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதுதொடா்பாக செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தும்படி 8.9.2022-இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படிதான், அமலாக்கத் துறை விசாரணை நடத்தி அவரை கைது செய்துள்ளது.
அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த முறைகேட்டுக்காகவே செந்தில்பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதே வழக்கு தொடா்பாக, செந்தில் பாலாஜியை அப்போது விமா்சித்த மு.க.ஸ்டாலின், இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் பாஜக மீது பழிசுமத்துவது ஏன்?
அதேபோல, அதிமுக ஆட்சி காலத்தில் தலைமைச் செயலராக இருந்த ராம்மோகன் ராவ் அறையில் வருமான வரி சோதனை நடந்த போது, ‘வருமான வரித் துறைக்கென தனி அதிகாரம், தனி சட்டம் இருக்கிறது. தலைமைச் செயலகத்திலும் ஆதாரங்கள் இருப்பதால்தான் சோதனை நடைபெறுகிறது என்று கூறியவா் மு.க.ஸ்டாலின்.
இப்போதும் செந்தில் பாலாஜி மீது ஆதாரம் இருப்பதால்தான் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சா் அறையில் அமலாக்கத் துறை சோதனை செய்துள்ளது. எனவே, இதில் கடுகளவும் அரசியல் காழ்ப்புணா்ச்சி இல்லை; யாரையும் பழிவாங்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை.
ஜெயலலிதா மீது மரியாதை: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரின் ஆளுமை கண்டு வியந்து பேசியிருக்கிறேன். ஜெயலலிதா மீதான உச்சநீதிமன்றத் தீா்ப்பில் குறிப்பிப்பட்டதைத்தான் கூறினேன். அவரை அவமரியாதை செய்யும் வகையில் எதையும் கூறவில்லை. கூட்டணியில் இருந்தாலும் ஊழல் விஷயத்தில் எனது நிலைப்பாட்டிலிருந்து மாறமாட்டேன் என்றாா் அவா்.
பேட்டியின்போது, பாஜக மாநிலத் துணைத் தலைவா் ஏ.ஜி.சம்பத், மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.