கம்பம்: தேனி கம்பம் நகராட்சியில் 144 தடையுத்தரவு பிறப்பித்து உத்தமபாளயம் கோட்டாட்சியர் பால்பாண்டி ஆணையிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் அரிசிக்கொம்பன் யானை நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். வேடிக்கை பார்ப்பவர்களின் இடையூறால் சேதம் ஏற்படாமலிருக்க வனத்துறையினர், காவல் துறையினர் திணறி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை குமுளி ரோசாப்பூ கண்டம் பகுதியில் நடமாடிய அரிசிக்கொம்பன் யானை குமுளி மலை வழியாக லோயர்கேம்ப்பிற்கு மதியம் வந்தது. பெரியாறு மின்சார உற்பத்தி நிலையம் பின்புறம் சென்று கழுதை மேடு புலம் பகுதியில் சுற்றியது.
பின்னர் இரவு தம்மணம்பட்டி பார்ம் ஹவுஸ் பகுதியில் முகாமிட்டது. வனம் மற்றும் காவல் துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை கம்பம் நோக்கி வந்தது. நடராஜன் திருமண மண்டபம் பின்புறத்தில் உள்ள தனியார் வேப்பம் புண்ணாக்கு உற்பத்தி தொழிற்சாலைக்குள் புகுந்தது. பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து ஏகழூத்து சாலையில், மின்சார வாரிய அலுவலகம் அருகே நின்று அப்படியே கிழக்கு பக்கமாக நந்தகோபாலன் கோயில் தெரு வழியாக நாட்டுக்கல் பகுதியை வந்தடைந்தது.
மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதி, வசிப்பிடம் என்பதால் வேடிக்கை பார்க்க கூட்டம் அதிகரித்து வீடு, தெருக்கள் வழியாக சென்ற அரிசிக்கொம்பனை பார்த்த பொதுமக்கள் அலறினர். யானை வீடுகளை தாண்டி மீண்டும் ஏகழூதது சாலை மேல்புறம் தென்னந்தோப்புக்குள் சென்றது. அங்கிருந்து மேற்குபுறம் கம்பம் மெட்டு வனப்பகுதிக்குள் யானையை விரட்ட வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.
சுமார் 3 மணி நேரம் கம்பம் நகருக்குள் உலா வந்த அரிசி கொம்பனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
யானை ஊருக்குள் நடமாடியதால் கம்பம் துணை மின்நிலையத்தில் விநியோகம் நிறுத்தப்பட்டது. மேற்கு பகுதியில் உள்ள அனைத்து கடைகள், உழவர் சந்தை அடைக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யப்பட்டது.
கம்பத்தைச் சேர்ந்த பால்ராஜ் (65), இவர் செக்யூரிட்டியாக டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார். சனிக்கிழமை யானை நடமாடும் பகுதியை வேடிக்கை பார்க்க வந்தவரை யானை துதிக்கையால் தள்ளியதில் கீழே விழுந்து காயமடைந்தார்.
காவல் துறையினர் அவரை கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நந்தகோபாலன் தெருவில் சாலையோரத்தில் இருந்த ஆட்டோவை தூக்கி எறிந்தது.
இந்நிலையில், கம்பத்தில் அரிக்கொம்பன் யானை நடமாடும் நிலையில் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்க 144 தடை போடப்பட்டுள்ளது. 10 பேரை பலி கொண்ட அரிக்கொம்பன் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத் துறையினர் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: ஜூன் 2-ல் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை
அரிக்கொம்பன் யானை நடமாட்டத்தால் கம்பத்தில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி யானைகள் முகாவில் இருந்து 2 கும்கி யானைகளை வரவழைக்கவும் வனத் துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.