செங்கோல் முன்பு பிரதமர் மோடி விழுந்து வணங்கியது குறித்து தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவிட்டிருந்ததற்கு, அறிவிக்கிறதா? என பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்த பதிவுக்கு பல தரப்பு கருத்துகளும் குவிந்து வருவதால் டிவிட்டர் பக்கமே களேபரமாகியிருக்கிறது.
புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல் முன்பு, பிரதமர் நரேந்திர மோடி விழுந்து வணங்கிய படத்தை, தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவிட்டு, "மூச்சு இருக்கா...." என கருத்துகளை பதிவிட்டிருந்தார். இதற்கு சில தரப்பினர் எதிர்ப்புகளையும் கண்டனத்தையும் பதிவு செய்திருந்தனர்.
இதற்கிடையே, தமிழக அமைச்சர் மனோ தங்கராஜின் டிவிட்டர் பதிவை மேற்கோள்காட்டி, இதை எழுதியவருக்கு அறிவிக்கிறதா? என, முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பொன். ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜின் பதிவை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தனது கண்டனத்தை இவ்வாறு பதிவிட்டிருந்தார்.
அதாவது,
இதை எழுதியவருக்கு அறிவிருக்கிறதா ?
இவரது செருப்பே துடிக்கும் இவரை அடிக்க
ஊரை அடித்து உயிர் பிழைப்போருக்கு
செங்கோலையும் அதை மதிப்பவரைப் பற்றியும் என்ன தெரியும் ?
செங்கோல் - அறம் (மதம் அல்ல) சார்ந்த ஆட்சியின் சான்று
அனைவரையும் சமமாக மதிக்கும் பண்பு
அணு அளவும் பொதுப் பணத்தை திருடா தன்மை
செங்கோலுக்கு சரண் என்றால்
செம்மைக்கு சரண்
செந்தமிழுக்கும் தமிழர் பண்புக்கும் சரண்.
ஆணவம் தலைக்கேறி நிற்கும் அமைச்சரை, அரசை தர்மம் தண்டிக்கும்.
தண்டமிட்டு வணங்கிய பிரதமரை தமிழர் போற்றுவர், தர்மம் வழி நடத்தும் என்று தனது கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.
மனோ தங்கராஜின் பதிவுக்கும் அதனைத் தொடர்ந்து பொன். ராதாகிருஷ்ணன் கண்டனத்துக்கும், டிவிட்டர் பக்கத்தில் பல தரப்பிலிருந்தும் கருத்துகள் குவிந்து வருவதால், டிவிட்டர் பக்கமே களேபரமாகியிருக்கிறது.
பொன். ராதாகிருஷ்ணன் பதிவுக்கு ஒருவர்,
அறம் சார்ந்த ஆட்சியின் சான்று அனைவரையும் சமமாக மதிக்கும் பண்பு இதை பதிவிட உங்களுக்கு எப்படி மனம் வருகிறது?
மல்யுத்த வீரர்கள் இன்று ரோட்டில் கிடப்பதுதான் உங்கள் அறமா.....?
நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழாவிற்கு இந்தியாவின் முதல் குடிமகளை புறக்கணித்ததே உங்களின் சமமாக மதிக்கும் பண்பா..? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மற்றொரு கருத்தாக, ஜனாதிபதியை புறக்கணித்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பெண்களை பாலியல் வல்லுறவு செய்த காமுகனை வைத்துக்கொண்டு புதிய பாராளுமன்றத்தை திறப்பது தான் ஜனநாயகமா? என்று பதிவிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு ஆதரவாக ஒருவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்..
தமிழர் பெருமையை உலகெங்கும் பரப்பிய ராஜராஜ சோழன் வழியில் வந்த ஒரு வரலாற்று கலாச்சார பண்பாட்டை கேவலப்படுத்தும் விதத்தில் தமிழர்களே பதிவிடுவது வேதனை அளிக்கிறது நேருவின் கைத்தடி என்று கேவலப்படுத்திய ஜென்மங்களுக்கு இது புரியாது என்று பதிலளித்துள்ளார்.
பொன். ராதாகிருஷ்ணனுக்கு மற்றொரு வாசகர் இவ்வாறு பதிவிட, செங்கோல் பற்றிய பதிவிற்கு இவ்வளவு வக்கிரமாக பதிலை போடும் தாங்கள் அங்கே டெல்லியில் பல மாதங்களாக போராடிக் கொண்டிருக்கும் நம் நாட்டின் பெருமைகளான மல்யுத்த வீரர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்... செங்கோல் கேட்கவே...என்று பதிவிட்டிருக்கிறார்.
இந்த டிவீட்டுக்கு சிலர், பெரியார் தடியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ஒரிஜினல் செங்கோல் என்றும், பங்குச் சந்தையை கட்டுப்படுத்திய சாமியார் என்று தேசிய பங்குச் சந்தையில் நடந்த முறைகேடு குறித்த பதிவுகளையும் இணைத்துள்ளனர்.
சிலர், தில்லியில் கைது செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து, நடிக்கும்போது, நடிப்புக்குப் பின் என தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்ட புகைப்படங்களை இணைத்துள்ளனர்.
மேலும் ஒருவர், மனோ தங்கராஜுக்கு எதிரான செய்திகளையும் இந்த டிவிட்டர் பக்கத்தில் இணைத்து, இரு தரப்பிலும் காரசார வாக்குவாதம் நீண்டுகொண்டே இருக்கிறது.
இதில் நகைமுரண் என்னவென்றால், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நிறுவப்பட்ட செங்கோல் மற்றும் அது குறித்து தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் செய்திருந்த டிவீட்டுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அதனை அவர் எப்போதோ நீக்கியேவிட்டார்.
ஆனால், அவரது நீக்கப்பட்ட பதிவை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து, பொன். ராதாகிருஷ்ணன் கருத்துப் பகிர்ந்திருப்பதால், அது குறித்து ஏராளமானோர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
இல்லாத டிவீட்டுக்கு இத்தனை பிரச்னையா என நீளும் கருத்துப் போரைப்பார்க்கும் மக்கள் மனதில் கேள்வி எழலாம்.