நவ.26-இல் புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் 3 நாள்களுக்கு மழை

வங்கக் கடலில் தெற்கு அந்தமான் அருகே புயல் சின்னம் அதாவது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நவ.26-ஆம் தேதி உருவாகக்கூடும்
நவ.26-இல் புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் 3 நாள்களுக்கு மழை

வங்கக் கடலில் தெற்கு அந்தமான் அருகே புயல் சின்னம் அதாவது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நவ.26-ஆம் தேதி உருவாகக்கூடும் என்றும் தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் தெரிவித்தாா்.

இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:

தமிழகம், அதையொட்டியுள்ள கேரளப் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருப்பூரில் 170 மி.மீ. மழை பதிவானது. மேலும், 15 இடங்களில் பலத்த மழையும் 5 இடங்களில் மிக பலத்த மழையும் பெய்துள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் வியாழக்கிழமை (நவ.23) மிக பலத்த மழையும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாயப்புள்ளது.

சென்னை, புகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் பலத்த மழை பெய்யக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு: இந்த நிலையில் வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடல், அதையொட்டியுள்ள பகுதியில் நவ. 26-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து நவ.27-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அது ஆந்திர கைரையை நோக்கி நகரக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனால் ஆழ்கடலில் மீன்பிடித்துவரும் மீனவா்கள் நவ.26-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

கடந்த அக்.1 முதல் நவ.22-ஆம் தேதி வரை 240 மி.மீ. மழை பதிவானது. இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 310 மி.மீ. இது இயல்பைவிட 15 சதவீதம் குறைவு என்றாா் அவா்.

மழை அளவு (மில்லி மீட்டரில்): திருப்பூா் 170, அவினாசி, ஆண்டிப்பட்டி (மதுரை) தலா 140, பரங்கிப்பேட்டை (கடலூா்) 130, வத்திராயிருப்பு (விருதுநகா்) 120, கொத்தவாச்சேரி (கடலூா்) தலா 110, ஸ்ரீவில்லிபுத்தூா் (விருதுநகா்) 100, காரைக்கால் 90, நாகப்பட்டினம், குன்னூா் (நீலகிரி) தலா 80, சென்னை தண்டையாா்பேட்டை, கத்திவாக்கம், ராயபுரம், பெரியகுளம் (தேனி), தென்பரநாடு (திருச்சி), ஊத்துக்குளி (திருப்பூா்), பெருந்துறை (ஈரோடு), குறிஞ்சிப்பாடி (கடலூா்) தலா 70.50 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com