
ஈரோடு: ஈரோட்டில் மழை காரணமாக, சனிக்கிழமை காலை வீட்டின் மேல் தளம் இடிந்து கீழே விழுந்ததில் தாய், மகன் பலியாயினர்.
ஈரோடு பி.பெ. அக்ரஹாரம், தர்கா வீதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (45). இவரது மனைவி சராமா (34). இவர்களுக்கு ஒரு மகளும், முகமது அஸ்தக் (13) என்ற மகனும் உள்ளனர்.
ஜாகிர் உசேன் ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். மகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் கணவருடன் வசித்து வருகிறார். முகமது அஸ்தக் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
ஜாகிர் உசேன் தங்கி உள்ள வீடு பழமையான வீடாகும். இதன் கீழ் தளத்தில் ஜாகிர் உசேன் குடும்பத்துடன் தங்கி உள்ளார். முதல் தளத்தில் கணவன், மனைவி என ஒரு குடும்பத்தினர் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தாலும் மாலையில் இருந்து இரவு வரை இடியுடன் கூடிய கனத்த மழை பெய்து வருகிறது. வெள்ளிகிழமை இரவும் பரவலாக மழை பெய்தது.
இதையும் படிக்க | சின்னமனூரில் இளைஞர் குத்திக் கொலை: இருவர் சரண்
இதையடுத்து ஜாகிர் உசேன் மழை பெய்ததால் தான் வேலை பார்க்கும் பேக்கரி கடையிலேயே இரவு தங்கிவிட்டார். சாரமா மற்றும் அவரது மகன் முகமது அஸ்தக் ஆகியோர் வீட்டில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மழை பெய்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை 5.15 மணி அளவில் மழை காரணமாக முதல் தளத்திற்கு மேல் உள்ள மொட்டை மாடி சுவர் இடிந்து முதல் தளத்தில் விழுந்துள்ளது. இதனால் முதல் தளத்தின் ஒரு பகுதி இடிந்து தரை தளத்தில் விழுந்துள்ளது. அப்போது தரை தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த சாரமா, மற்றும் அவரது மகன் முகமது அஸ்தக் மீது சிமெண்ட் ஸ்லாப் இடிந்து விழுந்து அவர்களை அழுத்தியது. இடிபாடுகளுக்குள் சிக்கிய தாய், மகன் இருவரும் கூச்சலிட்டனர். இதயைடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக கருங்கல்பாளையம் போலீசாருக்கும், ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கிய தாய், மகனை மீட்க முயற்சி செய்தனர். சிறிது நேரம் போராட்டத்துக்கு பிறகு அவர்களை மீட்ட போது சாரமா மற்றும் அவரது மகன் முகமது அஸ்தக் உடல் நசுங்கி பலியானது தெரிய வந்தது.
இதையும் படிக்க | பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்: ராஜஸ்தானில் கொடூரம்!
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது உடல், உடல் கூறாய்வுக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜாகிர் உசேன் பேக்கரி கடையிலேயே தூங்கியதால் அவர் உயிர் தப்பினார். இதே போல் முதல் தளத்தில் மற்றொரு அறையில் தூங்கிய கணவன், மனைவியும் உயிர் தப்பினர்.
ஜாகிர் உசேன் தங்கி இருந்த வீடு மிகவும் பழமையானது என்பதால் மழை காரணமாக வீட்டின் மேல் கூரை (சிமெண்ட் ஸ்லாப்) இடிந்து விழுந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...