திமுக கூட்டணியில் விசிக தொடரும்: வன்னி அரசு ட்வீட்

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். 
திமுக கூட்டணியில் விசிக தொடரும்: வன்னி அரசு ட்வீட்
Published on
Updated on
1 min read

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். 

அதிமுக - பாஜக இடையே மோதல் நிலவி வந்ததன் காரணமாக நேற்று(திங்கள்கிழமை) நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து முற்றிலும் விலகுவதாக அதிமுக அறிவித்தது.

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுகவின் இந்த அறிவிப்பு அரசியலில் சற்று அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதையொட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் கூட்டணி மாற்றம் நிகழலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது ட்விட்டர் பக்கத்தில், 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போல பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா? அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கை வழியில் சனாதனத்தை எதிர்த்து எப்படி எமது தலைவர் களமாடுகிறாரோ அப்படித்தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டே களமாடி வருகிறார் முதல்வர். 

திமுக தலைமையிலான கூட்டணி, பாஜகவையும் சனாதனத்தையும் வலுவாக எதிர்க்கும் கூட்டணியாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் விடுதலைச் சிறுத்தைகள், திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக இருக்கிறது. கடந்த 2021ல் நடைப்பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 6 இடங்களே ஒதுக்கப்பட்டபோதும், பாஜகவை வீழ்த்தவே திமுக கூட்டணியில் இடம் பெற்றோம்.

ஆகவே, திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெற்றிருப்பது நாட்டை பாதுகாக்கவே. இச்சூழலில், பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கூட்டணி இல்லை என்று நேற்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தவுடன், விடுதலைச் சிறுத்தைகள் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் எனவும் வரப்போகிறது எனவும் ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் அரசியல் புரோக்கர்கள்.

பாஜகவை அதிமுக எதிர்ப்பது கோட்பாட்டு அடிப்படையில் இல்லை என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சரியாக புரிந்து கொண்டுள்ளோம். எங்களிடம் எந்த ஊசலாட்டமும் இல்லை. திமுக தலைமையிலான கூட்டணியால் மட்டுமே பாஜக எனும் தீய சக்தியை அழித்தொழிக்க முடியும். அந்த வகையில், அரசியல் புரோக்கர்களின் கேடு செயல் நிறைவேறாது. விடுதலைச் சிறுத்தைகள் அரசியல் புரோக்கர்களின் அற்ப ஆசைக்கு வைக்கப்பட்ட களிமண் அல்ல; காட்டாற்று வெள்ளத்தையே திசைதிருப்பும் கற்பாறை என எச்சரிக்க கடமைப்பட்டுள்ளோம். இந்த கற்பாறையில் அரசியல் புரோக்கர்கள் அடிபடப்போவது உறுதி!' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com