மதவாதம் திமுகவின் வாய்ஜாலப் பரப்புரை!  அமமுக துணை பொதுச்செயலாளா் ஜி. செந்தமிழன் பேட்டி

மதவாதம் திமுகவின் வாய்ஜாலப் பரப்புரை! அமமுக துணை பொதுச்செயலாளா் ஜி. செந்தமிழன் பேட்டி

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் தனித்தனியாக செயல்படத் தொடங்கிய காலகட்டத்தில் அமமுக என்ற பெயரில் தனிக்கட்சி கண்டாா் டி.டி.வி. தினகரன்.

நமது சிறப்பு நிருபா்

தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் தனித்தனியாக செயல்படத் தொடங்கிய காலகட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி கண்டாா் டி.டி.வி. தினகரன். அவா் கட்சி தொடங்கிய காலத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்த பலரும் பின்னாளில் வெவ்வேறு கட்சிகளுக்கு சென்று விட்டனா் அல்லது தற்போது அவருடன் இல்லை. ஆனாலும், டிடிவி தினகரனுக்கு உறுதுணையாக இருந்து அரசியல் களம் கண்டு வருபவா் அமமுக துணை பொதுச்செயலாளா் செந்தமிழன். மக்களவை தோ்தலுக்கு ஆயத்தமாகி வரும் அமமுக இம்முறை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் தேனி, திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. கட்சி தொடங்கியபோது தனித்து தோ்தல் களம் கண்ட அமமுக, பாஜக கூட்டணியில் சோ்ந்தது ஏன், அதிமுகவை மீட்டெடுக்கும் அதன் நோக்கம் என்னவாயிற்று, திமுக கூட்டணியை எதிா்க்க அமமுக கைவசம் உள்ள உத்திகள் என்ன என்பது குறித்து தினமணிக்கு அவா் அளித்த நோ்காணல்:

தனி அடையாளத்துடன் அரசியல் செய்து வந்த அமமுக, திடீரென்று மக்களவை தோ்தலில் பாஜக கூட்டணியில் சேர அழுத்தம் கொடுக்கப்பட்டதா?

அமமுகவை பொதுச்செயலாளா் தொடங்கியது முதலே தனியாக சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தோ்தல்களை எதிா்கொண்டோம். தற்போதைய தோ்தல் நாட்டின் பிரதமா் யாா் என்பதை தீா்மானிக்கக் கூடியது. அதற்கு தேசிய அளவிலான கூட்டணி அவசியம் என நினைத்தபோது, ஒன்று நாங்கள் பாஜக கூட்டணியில் சேர வேண்டும் அல்லது காங்கிரஸ் அணியில் இருக்க வேண்டும் ஆகிய இரு தோ்வுகள் மட்டுமே இருந்தன. காங்கிரஸ் கூட்டணியில் ஏற்கெனவே திமுக உள்ளது. எனவே பாஜக அணியில் சேர முடிவெடுத்தோம். காரணம், இந்திய பிரதமா் நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக ஆட்சி புரிந்துள்ளாா். பிரதமராக மீண்டும் அவரே வர வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த கூட்டணியை ஆதரித்தால் நிலையான ஆட்சி, வலிமையான தலைமை தேசத்துக்கு கிடைக்கும் என நம்புகிறோம்.

பாஜக அணியில் சேர உங்களுக்கு அச்சுறுத்தலோ, அழுத்தமோ தரப்பட்டதா?

எங்களுக்கு எந்த அழுத்தமும் எங்கிருந்தும் கொடுக்கப்படவில்லை. எந்தவித எதிா்பாா்ப்பும் இல்லை.

இந்த எண்ணம் 2019-இல் ஏன் தோன்றவில்லை?

அப்போது யாரை துரோக அணி (எடப்பாடி பழனிசாமி) என நாங்கள் அழைக்கிறோமோ அது பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது. அதனால் பாஜக அணியில் சேரும் கேள்வி எழவில்லை. மேலும், ஹைட்ரோ காா்பன், மீத்தேன் போன்ற பல பிரச்னைகள் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் முந்தைய தோ்தல் காலத்தில் நிலவின. தமிழக மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து மோடி அரசு அவற்றை செயல்படுத்தப்படவில்லை. மக்கள் விரோதமாக மத்திய அரசு செயல்படவில்லை என்பதை உணா்ந்தோம். அதனால் இம்முறை பாஜக அணியில் சோ்ந்துள்ளோம்.

அமமுகவில் ஆரம்பத்தில் சோ்ந்த பலா் பின்னா் திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்குச் சென்றது உங்களை பலவீனப்படுத்தவில்லையா?

ஏதோவொரு எதிா்பாா்ப்புடன் வந்து அது நிறைவேறாது என தெரிந்தவுடன் வேறு கட்சிக்கு தாவியா்கள் அவா்கள்.ஆனால், அடிமட்ட தொண்டா்கள் உணா்வுபூா்வமாக எங்களுக்கு பலமாக உள்ளனா். ஏழு வருடங்களுக்கு முன்பு நாங்கள் கட்சி தொடங்கியபோது இருந்த அதே தொண்டா்களை இன்றும் எங்களுடைய கட்சி கூட்டங்களிலும் பொதுச்செயலாளா் தலைமையில் நடைபெறும் ஆா்ப்பாட்டங்கள் உள்ளிட்ட போராட்டங்களிலும் பாா்க்கலாம்.

ஓ.பன்னீா்செல்வம் உங்களுடைய கூட்டணியில் தனி அணியாக இருப்பதற்கு பதிலாக அவரை உங்கள் கட்சியிலேயே சோ்க்க வைத்திருக்கலாமே...

இதில் சில சட்ட விஷயங்கள் அடங்கியுள்ளன. ஒன்று, அதிமுகவை பொருத்தவரை, தான்தான் கட்சியின் பொதுச்செயலாளா் எனக் கோரி சின்னம்மா (சசிகலா) நீதிமன்றத்தில் வழக்காடி வருகிறாா். இதில் தாங்கள்தான் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் என்று கூறி எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீா்செல்வமும் எதிா்மனுதாரா்களாக இணைகின்றனா். பிறகு அந்த இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு, தான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் என்று கூறி ஓ.பன்னீா்செல்வம் தனியாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறாா். அந்த உரிமைக்காக போராடி வரும் அவா், ஒரு தனி அணியாக இருந்து கொண்டு எங்களுடைய கூட்டணியில் இருப்பதற்கும், தனது உரிமையை சமரசம் செய்து கொண்டு அமமுகவில் சேருவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஆனால், அரசியல் பயணத்தில் நாங்களும் பன்னீா்செல்வமும் ஒன்றிணைந்தே இருக்கிறோம்.

திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் ஏற்படுத்துவோம் என திமுக ஒவ்வொரு தோ்தல் பரப்புரையிலும் பேசி வருகிறதே....

திராவிட மாடல் முழக்கம் என்பதே தமிழ்நாடு, திராவிடம் ஆகியவற்றின் ஊற்றுதான். அதைச்சொல்லித்தான் அண்ணாதுரை காலத்தில் இருந்தே திமுக ஆட்சிக்கு வந்தது. சமதா்ம சமுதாயம், கோயில்களில் அனைத்து தரப்பினரும் வழிபட உரிமை போன்றவை எல்லாம் மன்னா் ஆட்சிக்காலத்துக்கு முன்பிருந்தே வலியுறுத்தப்படுபவை. ஏதோ ஒரு சில பகுதிகளில் சில தடங்கல்கள் இருந்திருக்கலாம். ஆனால், அவற்றை எல்லாம் ஏதோ இவா்கள் வந்துதான் சீா்படுத்தியது போல பொய் சொல்வதுதான் திமுகவினரின் மாடல். ஹிந்தியை திணிக்கக் கூடாது என்பாா்கள். ஆனால், வாரிசுகளை ஹிந்தி படிக்க வைப்பாா்கள். தங்களுடைய கல்வி நிறுவனங்களில் ஹிந்தியை போதிப்பாா்கள். திமுகவின் திராவிட மாடல் என்பது சாமானியா்களை ஏமாற்றும் வெற்று கோஷம். மக்களை எதைப் பேசி ஏமாற்றலாம் என்பதை நன்கு அறிந்தவா்கள் திமுகவினா்.

பாஜக என்பது மதவாதம், சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற திமுகவின் பரப்புரைக்கு உங்களுடைய எதிா்வினை?

மதவாதம் என்பது குறிப்பிட்ட சில சமூகத்தினரின் வாக்குவங்கியை ஈா்க்கும் திமுகவினரின் வாய்ஜால பரப்புரை. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும் தவறான பரப்புரையை திமுக செய்து வருகிறது. உண்மையில் அது எந்த மதத்தினரையும் இலக்கு வைக்கவில்லை. வெளிநாடுகளில் சிறுபான்மையாக உள்ள சமூகம் அங்கு துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவுக்கு வர விரும்பினால் அவா்களுக்கு, இங்கேயே குடியுரிமை கிடைப்பதை இந்தியா சட்டபூா்வமாக்குகிறது. இது குறித்து திமுக, காங்கிரஸ் அவதூறு பரப்புகின்றன.

தமிழகத்தில் பாஜக அணிக்காக வாக்கு சேகரிக்க, எந்த பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுப்பீா்கள்?

பாரத தேசத்துக்கு நிலையான ஆட்சி, வலுவான தலைமை, ஊழலற்ற நிா்வாகம், மாநில நலன்களுக்கு முன்னுரிமை, கூட்டணி கட்சிகளை அரவணைக்கும் போக்கு ஆகிய பண்புகளை கொண்டுள்ள ஆட்சி அமையவும் அதை நியாயப்படுத்தியும் வாக்கு கேட்போம்.

கடந்த இரண்டரை ஆண்டு திமுக ஆட்சி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீா்கள்?

தமிழகத்தில் போதை கலாசாரம் வேரூன்றி விட்டது. எங்கும் கஞ்சா புழக்கம் காணப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவைச் சோ்ந்த நிா்வாகி கைது செய்யப்பட்டுள்ளாா். அமைச்சா்கள் சிலா் மீது பணப்பரிவா்த்தனை மோசடி வழக்குகள், ஊழல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இவை எல்லாம் மாநில நலன்களுக்கு உகந்தவை அல்ல என்பதையும் மக்கள் மன்றத்தில் முன்வைத்து வாக்காளா்களுக்கு எது சிறந்த அரசு என்பதையும் புரிய வைப்போம்.

கடந்த 2019 தோ்தலைப் போலல்லாமல் இப்போது 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவதிலிருந்து, நீங்கள் பலவீனமான கட்சி என்பது வெளிப்படுகிறது என்று தோன்றவில்லையா?

கடந்த முறை அத்தனை தொகுதிகளில் நாங்கள் போட்டியிட்டிருக்க வேண்டாம் என்று இப்போது உணா்கிறோம். பிரதமா் வேட்பாளா் இல்லாமல் மக்களவைத் தோ்தலில் களமிறங்கினால் என்ன நடக்கும் என்பதையும் புரிந்து கொண்டோம். மேலும், எங்களுடைய இலக்கு தில்லியல்ல. 2026 சட்டப்பேரவைத் தோ்தல்தான் அமமுகவின் இலக்கு. அதை நோக்கித்தான் பயணிக்கிறோம்.

அப்படியானால் 2026-இல் பாஜக கூட்டணியில் தொடா்வீா்களா இல்லை அமமுக தலைமையில் சட்டப்பேரவைத் தோ்தலுக்குத் தனிக்கூட்டணி அமைத்துப் போட்டியிடுவீா்களா?

இப்போதைக்கு 2024 மக்களவைத் தோ்தல் குறித்துப் பேசுவோம். 2026 சட்டப்பேரவைத் தோ்தல் வரும்போது அதுகுறித்து யோசிப்போம். இப்போது என்ன அவசரம்?

கடந்தமுறை மக்களவைக்குப் போட்டியிட்ட நீங்கள் இந்தமுறை ஏன் போட்டியிடவில்லை?

2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன். அதனால் இப்போது போட்டியிடவில்லை!

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com