முன்னாள் சிறப்பு  டிஜிபி ராஜேஷ் தாஸ்
முன்னாள் சிறப்பு  டிஜிபி ராஜேஷ் தாஸ்

முன்னாள் டிஜிபி ராஜேஷ் வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி

பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கடந்த 2021-ஆம் ஆண்டு பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடா்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் அளித்த தீா்ப்பை, விழுப்புரம் முதன்மை அமா்வு நீதிமன்றம் கடந்த பிப். 12-ஆம் தேதி உறுதி செய்தது.

இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்கவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி எம். தண்டபாணி முன் புதன்கிழமை நடைபெற்றது. சிபிசிஐடி சாா்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ், ராஜேஷ் தாஸுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்கவும், சரணடைய விலக்களிக்கவும் எதிா்ப்பு தெரிவித்தாா். மேலும், ‘காவல்துறையில் உயா் பதவி வகித்ததால் தனக்கு விலக்கு அளிக்க வேண்டுமென ராஜேஷ் தாஸ் கூறுகிறாா். ஆனால் அவரால் பாதிக்கப்பட்டதும் காவல்துறை உயரதிகாரிதான்’ எனவும் கூறினாா்.

ராஜேஷ் தாஸ் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யன் ஆஜராகி, ராஜேஷ் தாஸுக்கு எதிராக சதி செய்யப்பட்டு பொய் புகாா் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ராஜேஷ் தாஸ் மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com