
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு இன்று தொடங்கிய பயணிகள் கப்பல் போக்குவரத்தை, புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நாகை மக்களவை உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் ஆகியோர் கொடியசைத்து, தொடங்கி வைத்தனர்.
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2023 அக்டோபர் 14- ஆம் தேதியில் தொடங்கி வைத்தார்.
செரியாபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. இது, இருநாட்டு பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
ஆனால் அடுத்த ஒரு சில நாள்களில் வடகிழக்கு பருவ மழையையும், பயணிகளின் பாதுகாப்பையும் காரணம் காட்டி, 2023 அக்டோபர் 23 ஆம் தேதியில், கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு சிவகங்கை என்ற பெயரில் மீண்டும் கப்பல் சேவை இன்று (ஆக. 16) தொடங்கப்பட்டது.
இந்த சேவையை நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ், மக்களவை உறுப்பினர் வை. செல்வராஜ், புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
www.sailindsri.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்த இலங்கை தமிழர்கள் 5 நபர்கள் உள்பட, 44 பயணிகள் முதல் பயணமாக கப்பலில் சென்றனர்.
சிவகங்கை கப்பலானது, இன்று காலை 10 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. சிறிது காலதாமதம் ஏற்பட்டதால், பிற்பகல் 12.15 மணிக்கு பிறகு புறப்பட்டது.
காங்கேசன்துறைக்கு மாலையில் சென்றடையும் கப்பல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு, சனிக்கிழமை (ஆக. 17) இலங்கையில் இருந்து புறப்பட்டு நாகையை வந்தடைகிறது.
பயணிகள் கப்பல், ஆகஸ்ட் 18 முதல் நாள்தோறும் இரு வழித்தடங்களிலும் நாகையிலிருந்து காலை 8 மணிக்கும், காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கும் இயக்கப்படும்.
கப்பலில் 123 சாதாரணப் பிரிவு இருக்கைகளும், 27 பிரீமியம் பிரிவு இருக்கைகளும் உள்ளன..
பயணச் சீட்டு ஜிஎஸ்டி வரியுடன் சாதாரண இருக்கைக்கு ரூ.5000, பிரீமியம் இருக்கைக்கு ரூ.7500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
25 கிலோ எடை கொண்ட உடமைகள் மட்டுமே எடுத்து செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.