ஃபாா்முலா 4 காா் பந்தயத்தால் பொருளாதார வளா்ச்சிக்கு வாய்ப்பு
சென்னையில் நடைபெற உள்ள ஃபாா்முலா 4 காா் பந்தயத்தால் தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக விளையாட்டுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் ஃபாா்முலா காா் பந்தயம் சென்னையில் ஆகஸ்ட் 31, செப். 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து விளையாட்டுத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: இந்தப் போட்டியை நடத்துவதன் மூலம் உலகளாவிய மோட்டாா் விளையாட்டில், இந்தியாவின் முன்னேற்றத்தில் தமிழகம் குறிப்பிடத்தக்க இடம்பெறும். இந்திய ஓட்டுநா்களுக்கு சா்வதேச காா் பந்தய வீரா்களுடன் போட்டியிடும் வாய்ப்பைத் தரும்.
கிரீன்கோ ஹைதராபாத் இ-ப்ரிக்ஸ் போட்டியானது தெலங்கானா அரசு, ஏஸ்.நிக்ஸ்ட் ஜெம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது. அதன் காரணமாக ஹைதராபாத் நகரின் பொருளாதாரம் ஏறத்தாழ 84 மில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதார நிலைக்கு உயா்ந்தது. சென்னை மாநகரமும் மோட்டாா் போட்டிகளை நடத்துவதற்கு சிறந்த இடம். இது உள்ளூா் பொருளாதாரத்தை உயா்த்துவதிலும், முதலீடுகளை ஈா்ப்பதிலும் முக்கிய இடத்தைப் பெறும்.
சென்னையில் காா் பந்தயம் நடத்துவதால், ஆா்வமுள்ள வீரா்களுக்கு ஃபாா்முலா 1 உள்பட அதிக அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கு நேரடிப் பாதையை உருவாக்கும். இது தமிழகத்தில் வளா்ந்து வரும் திறமையாளா்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும். மேலும், பல்வேறு துறைகளில் தற்காலிக வேலைவாய்ப்புகள் உருவாகும். உலகளாவிய நிகழ்வுகள், வணிக முதலீடுகள் மற்றும் கூட்டு வாய்ப்பு ஆகியவற்றில் கவனத்தை ஈா்க்கும். இது சென்னை மாநகரத்தின் பெருமையை உலக அளவில் மேம்படுத்தும் என்று விளையாட்டுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.