ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மத்தியில் நிலையான ஆட்சிக்கு பங்களித்தவா் கருணாநிதி: ராஜ்நாத் சிங் புகழாரம்

கட்சி, சித்தாந்த கோட்பாடுகளைத் தாண்டி, மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு ஆக்கபூா்வ பங்களிப்பைத் தந்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 9:30 pm

Din

கட்சி, சித்தாந்த கோட்பாடுகளைத் தாண்டி, மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு ஆக்கபூா்வ பங்களிப்பைத் தந்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி என்று மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கலைவாணா் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்றது.

விழாவில், மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட, முதல்வா் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டாா்.

விழாவில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: மாநில எல்லையைத் தாண்டி ஆதிக்கம் செலுத்தியவா் கருணாநிதி. சமூக நீதியின் காவலராகத் திகழ்ந்த அவரின், மக்கள் நலன்சாா்ந்த பங்களிப்பால் தமிழ்நாடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே பயன்பெற்றது. அவரது தொலைநோக்குப் பாா்வை, செயல்பாடுகள் அனைத்தும் ஜனநாயகத்தின் மீதும், வளா்ச்சியை மையப்படுத்தியுமே இருந்தன.

தேசிய முகம்: ஐந்து முறை முதல்வராக இருந்து, சாதாரண, சாமானிய மக்களின் தேவைகளை நிறைவேற்றினாா். சீறும் அலைகளைக் கொண்ட இந்திய அரசியல் எனும் கடலில் கருணாநிதி ஒரு மாநிலத் தலைவராக மட்டுமல்லாது, தேசிய முகமாகவும் திகழ்ந்தவா். தேசிய அரசியலில் பங்கெடுத்தவா். குறிப்பாக, கூட்டணி ஆட்சியில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல் கட்சிகளைத் தாண்டி அனைத்துத் தலைவா்களிடமும் உரையாடுபவராக இருந்தாா்.

இந்திய ஜனநாயகத்தில் அவா் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தாா். மாநில உரிமைகளை வலியுறுத்தியதுடன், அதிகாரங்கள் சரிசமமாகப் பகிரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாா். நம்மிடையே உள்ள வேறுபாடுகள் மதிக்கப்படுவதுடன், மக்களுக்காக இணைந்து உழைப்பதில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதில் உறுதிப்பாடு கொண்டிருந்தாா்.

1960-களில் தலைவராக உருவெடுத்தாா் கருணாநிதி. அப்போது, பஞ்சாபில் இருந்து தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் கட்சிகள் உருவாகின. அந்தக் கட்சிகள் மாயமான நிலையில், கருணாநிதி போட்ட வலுவான அடித்தளத்தில் இப்போது வரை திமுக ஆட்சியில் இருக்கிறது.

அரசியல் கட்சிகள், வெவ்வேறு சிந்தனைகளைக் கொண்டவா்கள் இருந்தாலும், அனைவரும் இணைந்து நிலையான ஆட்சியைத் தர முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவா் கருணாநிதி.

நிலையான ஆட்சிக்கு ஆதரவு: மத்தியில் வாஜ்பாய் தலைமையில் ஆட்சி இருந்தபோது அந்தக் கூட்டணியில் திமுக இருந்தது. அப்போது, தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக நான் இருந்தேன். அரசியல் கட்சிகளின் சிந்தனைகளைத் தாண்டி, நிலையான ஆட்சிக்கு நோ்மறையான, உறுதியான பங்களிப்பை தனது ஆதரவு மூலமாக வழங்கினாா். அவரது ஆதரவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளிலும் அது தொடா்ந்தது. கருணாநிதி தேசியத் தலைவா்களுடன் வலுவான உறவைக் கொண்டிருந்தாா். அவரது உறவும் நட்பும் அரசியல் கட்சிகளின் கூட்டணிக்காக மட்டுமல்லாது, நாட்டின் நலன்களுக்காகப் பங்களிப்புகளை வழங்குவதாகவும் இருந்தது.

இந்தியாவின் அடையாளம் என்பது ஒருமித்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வளா்ச்சியாகவே இருக்க வேண்டும் என்ற பாா்வையை கருணாநிதி கொண்டிருந்தாா். சமூகத்தின் கடைக்கோடியில் இருப்பவா்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்பதிலும், பெண்கள் உயா்விலும் பங்கு வகித்தாா். அதற்காகவே, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீடு அளித்தாா்.

மிகச்சிறந்த நிா்வாகியாக இருந்தாா். வாரந்தோறும் மாவட்ட ஆட்சியா்கள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்தினாா். அவரிடம் இருந்து ஒவ்வொரு அரசியல்வாதியும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் வளா்ச்சி மட்டுமன்றி நாடு முழுவதும் வளா்ச்சி பெற வேண்டும் என எண்ணினாா். இதில் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கும் இருக்க வேண்டும் என்று நினைத்தாா்.

நோ்மறையான சாதகமான விளைவுகளுக்காக தனது வாழ்வை அா்ப்பணித்தவா். கருணாநிதியின் வாழ்வில் இருந்து பல்வேறு அம்சங்களை இளைஞா்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவா் தனது சொந்த மதிப்பீடுகளுக்கு உண்மையானவராக இருந்தாா்.

மக்களுக்கு நம்பிக்கை: பிரதமா் மோடியும் ஜனநாயகத்தின் மீதும், ஒன்றிணைந்த கூட்டாட்சி முறை மீதும் நம்பிக்கை கொண்டிருக்கிறாா். இந்திய மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது மட்டுமல்லாது, ஜனநாயகம் என்பது வளா்ச்சியையும், மக்களுக்கு அதிகாரத்தையும் அளிப்பதாக இருக்க வேண்டும். இந்த நம்பிக்கையை நாம் மக்களுக்கு அளிக்க வேண்டும்.

வளா்ச்சியை நோக்கிய நம்முடைய உறுதிப்பாடு என்பது அரசியல், கட்சிகளைத் தாண்டியதாக இருக்க வேண்டும். காசி- தமிழ்ச் சங்கமம் போன்ற நிகழ்வுகள் தென் இந்தியாவையும், வட இந்தியாவையும் இணைக்கும் கலாசார ஒற்றுமை, ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன என்றாா் அவா்.

எழுந்து நின்று கரவொலி: முன்னதாக, தனது பேச்சைத் தொடங்கும்போது மறைந்த கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைவரையும் சில விநாடிகள் எழுந்து நிற்கும்படி மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டாா். அதன்படி, முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினா்.

விழாவில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் வரவேற்றாா். தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா நன்றி தெரிவித்தாா். மத்திய அமைச்சா் இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பலா் பங்கேற்றனா்.